இது குறித்து கருத்துத் தெரிவித்த பல முகநூல் கந்தசாமிகள், 'மனுஷன் இவ்வளவு பிராடு பண்ணிவிட்டு அசராமல் பேட்டி கொடுக்கிறார்' என்று ஆச்சரியமாக எழுதியிருந்தார்கள். பாவம், அவர்கள் வெளிச்சத்தை மட்டுமே பார்ப்பவர்கள். நிழலையும் கவனியுங்கள். ஒல்லியாக இருப்பவனின் நிழல் குண்டாக இருந்தால்? அதுதான் இங்கே புதிர்.
பொதுவாகக் குற்றவாளிகளின் இயல்பு என்னவென்றால், பொது வெளியில் அவ்வளவாகப் பேசமாட்டார்கள். எதையாவது உளறி மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இருக்கும். ஆனால் இந்த மோகன் அவர்களின் பேட்டியில் அப்படி எந்தப் பயமோ தயக்கமோ இல்லை. இது அவருக்குப் புதிது என்பதால் கொஞ்சம் தடுமாறுகிறார், அவ்வளவுதான். மற்றபடி, அவருடைய பேட்டியையும் அதில் அவர் பேசிய வார்த்தைகளையும் வைத்துப் பார்த்தால், இவர் மோசடி செய்திருப்பதுபோல் தெரியவில்லை.
எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. அதாவது, இப்படி நடந்திருக்கலாம் என்ற வகையில் ஒரு கணிப்பு.
ஒரு திரைப்படம். ஒரு பெண் காணாமல் போய், படுகொலை செய்யப்படுகிறார். புலன் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் கடைசியாக ஊருக்குப் போவதற்காக ஒரு பஸ் புக் செய்திருக்கிறார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால், அந்தப் பெண் சொல்லப்பட்ட பஸ்ஸில் ஏறுவதும் தெரிகிறது. ஆனால் அந்தப் பஸ் கண்டக்டரை விசாரித்தால், அவர் எங்கள் பஸ்ஸில் ஏறவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார். பிற ஆதாரங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. அந்தப் பெண் ஏறிய பஸ்ஸின் பதிவு எண்ணும் சரியாக இருக்கிறது. பின் ஏன் இப்படி ஒரு குழப்பம்?
இங்கேதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. அந்த பஸ் முதலாளி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர். ஒரே பதிவு எண்ணில் இரண்டு பஸ்களை ஓட்டியிருக்கிறார். ஒன்று பயணிகளுக்காக. மற்றொரு பஸ்ஸில் சட்டவிரோதமாக ஏதோ கடத்தல் நடக்கிறது. அந்தப் பெண், இதுதான் அந்த பஸ் என்று நம்பி கடத்தல் பஸ்ஸில் ஏற, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
அந்தப் பெண் இந்த மோசடியைப் பார்த்துவிட்டார். அவரை முடிக்க வேண்டும். கூடவே, அவர் ஓர் இளம்பெண். எனவே அந்த பஸ்ஸில் இருந்தவர்கள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிடுகிறார்கள்.
இந்த அகல்விளக்கு பதிப்பக மோசடியும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு இருக்கக்கூடும். அதாவது, நிருபர்கள் போய்ப் பேட்டி எடுப்பது ஒரிஜினல் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை. ஆனால் இன்னொரு அகல்விளக்கு பதிப்பகம் ஏதோ ஒன்று போலியாக இயங்கியிருக்கிறது. அது ஆன்லைனில் மட்டுமே இயங்கும் ஒரு ஷெல் நிறுவனமாக இருக்கலாம். இந்தப் பதிப்பாளர் மோகன், அந்த பஸ் டிரைவரைப் போல, 'சார், என் பஸ்ஸில் அவங்க ஏறல. நீங்க ரெக்கார்டைப் பார்த்துக்குங்க' என்று அப்பாவியாய்ச் சொல்கிறார்.
அதே சமயம் இவரும் ஒரு வகையில் முறைகேடு செய்திருக்கிறார். ஆனால் அது நூலக ஊழல் இல்லை. அரசின் ரெட் டேப்பிசத்தைச் சமாளிக்க ஒரு நிறுவனத்தைப் பல நிறுவனங்களாக மாற்றியிருக்கிறார். எழுத்தாளர்கள் அடிக்கடி ராயல்டி, ராயல்டி என்று உயிரெடுப்பதைத் தவிர்க்க, இவரே பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கலாம். அல்லது நூலக அதிகாரிகளே, 'இப்படிச் செய்' என்று ஐடியா கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில், ஏதோ ஒரு கிச்சடியைச் செய்து இதுதான் பொங்கல் என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் கிச்சடியின் நிறம் வேறு, பொங்கலின் நிறம் வேறு என்பதை இவர்கள் கவனிக்கவில்லை; மாட்டிக்கொண்டார்கள்.
இனி இந்த மோசடி எப்படி நடந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கணிப்போம்.
இந்த நூலக அதிகாரிகள் மோசடி செய்வதற்குப் பிரபல பதிப்பகங்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள். அவர்களால் அநியாயத்துக்கு விலை வைக்க முடியாது. அவர்களுடைய புத்தகங்கள் புத்தகச் சந்தையிலும் விற்கும். எனவே, அங்கே ஒரு விலை, நூலகங்களுக்கு வேறு விலை என்பது அவர்களுக்குத் தலைவலி. அத்துடன் போலி எழுத்தாளர்களை உருவாக்கிப் பெயரையும் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எனவே இவர்களுக்குத் தேவை ஒரு பலியாடு. அதற்கு இந்த அப்பாவி மோகன் மாட்டிக்கொண்டார். இவருடைய புத்தகங்கள் இந்த உலகில் வேறு எங்கும் கிடைக்காது. இவையெல்லாம் ஸ்பெஷல் எடிஷன். எனவே விலை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். இது வசதியாக இருக்கவே இவரைப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.
ஆனாலும் குருவி தலையில் பனங்காயை வைக்க முடியுமா? கோடிகளில் அவருக்கு ஆர்டர் கொடுத்தால், அவர் உஷாராகி, ஏதோ மோசடி என்று ஒதுங்கிக்கொள்வார். எனவே கணக்குக் காட்டுவதற்காக அவருக்குக் குறைந்த எண்ணிக்கையில் ஆர்டரைக் கொடுத்திருக்கலாம். அவரும், 'இது 20 லட்சம்தானே, இதில் என்ன மோசடி இருக்கப்போகிறது?' என்று நினைத்திருக்கக்கூடும்.
ஆனால் இவர்கள் அதே புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் என்ற பெயரைப் பயன்படுத்தி வேறு இடங்களில் அச்சடித்திருக்கக்கூடும். இவரிடம் 500 புத்தகங்களை வெள்ளையாகவும், அவர்கள் கருப்பாக 4,500 புத்தகங்களை வேறு இடத்திலும் அச்சடித்து, மொத்தமாக ஆட்டையைப் போட்டிருக்கலாம். அல்லது அச்சடித்ததுபோல் கணக்குக் காட்டிவிட்டார்களா என்பதும் தெரியாது.
இப்போது மக்களிடம் காட்டுவதற்கு ஓர் ஆதாரம் இருக்கிறது. அதுதான் இந்த அகல்விளக்கு பதிப்பகம். இந்த நிஜ அகல்விளக்கு மோகனிடம், நீங்கள் கொடுத்த புத்தகங்களில் எத்தனை தலைப்புகள், ஒவ்வொரு தலைப்பிலும் எவ்வளவு புத்தகங்கள் கொடுத்தீர்கள், இதற்காக நீங்கள் வாங்கிய தொகை எவ்வளவு என்ற கணக்கையும், அதேசமயம் அரசின் கணக்கில் அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து எவ்வளவு புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் வாங்கி, இரண்டும் பொருந்திப் போகிறதா என்று கவனிக்க வேண்டும்.
காரணம், 50 கோடி அளவுக்குப் பட்ஜெட். இவர் என்னவென்றால் 17 லட்சம் என்கிறார். எனவே, யார் யாருக்குப் பணம் சென்றது என்ற விவரம் வரும்போதுதான் நமக்கு முழு உண்மையும் தெரியும்.
நான் இங்கே சொன்னது ஒரு குத்துமதிப்பான கணிப்புதான். ஆனால் இப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஊடகங்கள் நிஜ மோகனைப் பேட்டி எடுக்கிறார்கள். ஆனால் இந்த அரசு அதிகாரிகள் அவரை வைத்து காமெடி செய்துவிட்டார்கள். இன்னொரு போலி மோகன் இருக்கிறார். அவர் அரசு அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அவர் மாட்டும்போதுதான் முழு உண்மையும் வெளிவரும்.

0 comments:
Post a Comment