!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 13, 2026

சைக்கிள் டெண்டர், இது என்ன புதுசா இருக்கு?

சவுக்கு சங்கர் இலவச சைக்கிள் வாங்குவதில் ஊழல், ஊழல் எனக் கூக்குரலிட்டார். எனக்கு அப்போதே சந்தேகம். ஊழல் செய்பவர்கள் இவ்வளவு அப்பட்டமாகச் செய்யமாட்டார்கள்; இதில் ஏதோ முரண்பாடு இருக்கிறது, அது பின்னர் தெரியவரும் என்றுதான் நினைத்தேன். கிட்டத்தட்ட அதுதான் நடந்திருக்கிறது.

இருந்தாலும் இதுவும் ஊழல்தான். அதாவது, இப்போதெல்லாம் டெண்டர் என்பது வித்தியாசமாக மாறிவருகிறது. இவர்கள் டெண்டரில் விலையைக் குறிப்பிட்ட விதமே வித்தியாசமாகத்தான் இருந்தது. போட்டியில் சில நிறுவனங்கள் மட்டுமே. விலை வித்தியாசமும் மிகவும் குறைவு. சந்தேகப்படுவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. எனவே, முன்கூட்டியே ஊழல் என்று சங்கர் சொன்னதால் இப்போது அவர்கள் இறங்கி வந்திருக்கிறார்கள் போலும். ஒருவேளை அவர் சொல்லாமல் இருந்திருந்தால்? எனவே, சவுக்கு சங்கர் செய்தது ஒரு உத்திதான்.

ஆனால், அது என்ன பேரம் பேசுவது? குறைந்த விலை கேட்பவர்களுக்குத்தானே டெண்டரைக் கொடுக்க வேண்டும்? இது என்ன புதுமுறை?

முதலில் ஜவுளிக் கடைகளில் இப்படித்தான் அதிக விலையை நிர்ணயித்து, பின்னர் 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி என்று ஆரம்பித்தார்கள். இப்போது மருந்துப் பொருட்களிலும் அநியாயத்துக்கு விலையை உயர்த்தி, அங்கேயும் தள்ளுபடி என்று கொள்ளையடிக்கிறார்கள். ஆனால், டெண்டரிலுமா?

இனி ரோடு போட வேண்டுமென்றாலும், 4,000 கோடிக்கு டெண்டர் எடுத்து, பின்னர் 2,000 கோடியாகக் குறைப்பார்களா என்ன? இது ஏற்கெனவே இருக்கும் நடைமுறையா அல்லது புதிதாக வந்திருக்கிறதா?

ஆனால், இங்கே வேறு ஒரு பிரச்சினை இருக்கிறது.

இப்படி அடிக்கடி சைக்கிள் கொடுப்பதால் என்ன லாபம்? ஏற்கெனவே சைக்கிள் வாங்கிய மாணவ, மாணவிகள் சில ஆண்டுகள் பயன்படுத்தியிருப்பார்கள். அந்தச் சைக்கிள்கள் இப்போது என்ன ஆயின என்று தெரியவில்லை. இலவசம் என்றாலே சில ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடுவது மக்களின் பழக்கமாகிவிட்டது. இப்போது மீண்டும் இதே கதை.

கல்லூரிக்குச் சைக்கிளில் செல்வது சாத்தியமில்லை. கல்லூரி தூரமாக இருக்கலாம்; அல்லது அங்கே சைக்கிளில் செல்வது கவுரவக் குறைச்சலாக இருக்கலாம். அப்படியிருக்கையில், இந்த இரண்டு ஆண்டு காமெடிக்காக இந்த இலவச சைக்கிள் எதற்கு?

ஒருவேளை இப்போதும் சைக்கிள் தேவைப்படும் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்குக் கொடுக்கலாம். தேவையில்லாதவர்களுக்கு அந்தப் பணத்தை கேஷ் வவுச்சர்களாகக் கொடுக்கலாம். படித்து முடித்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்லும்போது, அந்த வவுச்சரைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தலாம் என்று ஒரு நிபந்தனை விதிக்கலாம். அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவாவது படிப்பார்கள்.

எல்லோரும் கொடுக்கிறார்கள், எனவே நானும் கொடுப்பேன் என்ற டிபிக்கல் மனப்பான்மை இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. அதனால் தேவை இருக்கிறதோ இல்லையோ, எல்லோருக்கும் கொடு என்ற நிலைதான். ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே என்ற மனப்பான்மை!

இதுதான் அன்றும், இன்றும், என்றும் ஆட்சியாளர்களின் லட்சணம். விளங்கிடும் நாடு!

0 comments:

Post a Comment