!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, November 24, 2026

ரஜினி முதல் விஜய் வரை – தயக்கத்தின் விலை!

கலெக்டர் புகார் அளித்துவிட்டாராம். நல்ல விஷயம். ஆனால் ஒரு கலெக்டரே புகார் கொடுக்க மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்கிறார் என்றால், சாதாரணப் பெண்களின் நிலை என்ன?

என்னதான் தொலைக்காட்சிகளில், விளம்பரங்களில் பெண்களை வீர மங்கைகளாகவும் அறிவாளிகளாகவும் காட்டினாலும், நிஜத்தில் இன்னும் அவர்கள் கோழைகளாகத்தான் இருக்கிறார்கள் அல்லது தைரியமாகச் செயல்படும் சூழல் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.

அதே சமயம் ஆண்களும் அப்படித்தான். திரைப்படங்களில் 100 ஆட்களை ஒரே ஆளாக நின்று தாக்கும் அதிரடி நாயகர்கள்கூட நிஜத்தில் கோழைகள்தான். இங்கே ரஜினி வேறு வகையான கோழை என்றால், விஜய் அதிகாரத்துக்கு வந்தும், அதுவும் ஒரு சாதாரணக் கட்சிக்காரர் மீதே நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். அதிகாரம் கையை விட்டுப் போய்விடும் என்ற பயம். ஆனால் கடைசியில் நடந்தது என்ன? இப்போது அவருக்குத்தான் அவமானம்.

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.

கலெக்டர்: ஆளும் கட்சிக்கு சங்கடம் வேண்டாம் என்று நாகரிகமாக இந்த விஷயத்தை அவர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் விஜய்க்கு ஒரு பெண்ணின் மரியாதையைவிடத் தன் கட்சியின் மரியாதைதான் முக்கியமாகப் போய்விட்டது. இப்போது இந்த விஷயம் வெளியே வந்து, அது தீவிரமாகி, புகார் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கவனிக்கவும், இந்தக் கலெக்டர் அநீதியைக் கண்டு பொங்கிப் புகார் கொடுக்கவில்லை. இனி வேறு வழியில்லை என்பதுதான். அந்த வகையில், இனி உங்கள் மீது பாலியல் சீண்டல் நடந்தால் தைரியமாகச் சொல்லுங்கள் என்று அவர் எந்தப் பெண்ணுக்கும் ஆலோசனை சொல்ல முடியாது.

ரஜினி: இவருக்கு அவருடைய எல்லை முதலிலேயே தெரிந்திருக்கிறது. இதை முதலிலேயே ரசிகர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தால் இந்த அவமானம் அவருக்கு வந்திருக்காது. ஆனால் பணம், அது கிடைக்க வேண்டுமென்றால் ரசிகனை உசுப்பிவிட வேண்டும். அந்தச் சுயநலம்தான் அவரை இந்த அளவுக்குத் தள்ளிவிட்டது. ஊழல்வாதிகளின் பணத்தில் நடித்து, ஊழலுக்கு எதிராகப் போராடிய புலி இவர். மேடையில் காக்கா கதையெல்லாம் சொல்லி, கடைசியில் தானே ஒரு காக்காவாக மாறிப்போனார்.

விஜய்: இந்தக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விஷயம் தெரிந்த உடனேயே அவரை ராஜினாமா செய்ய வைத்து அல்லது கட்சியை விட்டு நீக்கியிருந்தால், இந்நேரம் விஜயின் மரியாதை உயர்ந்திருக்கும். அது தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய பலமாக மாறியிருக்கும். ஆனால் இப்போது என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அவருடைய இமேஜ் கடுமையாக அடி வாங்கியிருப்பதுதான் நிஜம்.

அதிமுக: பாஜக கூட்டணி வேண்டாமென்றால் அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். வேண்டும் என்றால் அதை உடனடியாக முடித்திருக்க வேண்டும். ஆனால் இழு இழு எனப் பாஜகவினருக்குச் சலிப்பு தட்டும் வரை இழுத்ததால், அவர்களில் கணிசமானோர் சட்டமன்றத் தேர்தலில் விசிலுக்குப் போட்டுவிட்டார்கள். முடிவு அதிமுகவுக்குச் சங்குதான்.

தேமுதிக: அதே கதைதான். கூட்டணி குறித்து இப்போது அறிவிப்போம், அப்புறம் அறிவிப்போம், தேர்தல் முடிந்ததும் அறிவிப்போம் என இழுத்து, காங்கிரஸையும் விசிகவையும் வெறுப்பேற்றி, திமுகவுடன் கூட்டணி அமைத்தார்கள். கடைசியில் இங்கேயும் அதோகதிதான்.

காங்கிரஸ்: இவர்கள் கதையும் அதே கதைதான். திமுகவுடன் கூட்டணி வருமா வராதா என்ற அளவுக்கு குழப்பம். ஆனால் ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால் சனி திசை இருந்தும் அது குரு திசையாக மாறிவிட்டது. அது அமைச்சர்களாக மாறிவிட்டது. ஒருவேளை தவெகவுக்குப் பெரும்பான்மை கிடைத்திருந்தால், காங்கிரஸ் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? முடிவுகளை விரைவாக எடுங்கள். சமீபகால அரசியல் வரலாற்றில் முடிவெடுக்கத் தயங்கியவர்கள் தோல்வியை மட்டுமல்ல, படுதோல்வியையும் சந்தித்திருக்கிறார்கள். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவு, சில நேரங்களில் முடிவே எடுக்காமல் இருந்ததைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்தப் பட்டியலில் விஜயும் விரைவில் சேரலாம்!

0 comments:

Post a Comment