!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 2, 2022

புல்லட் டிரைன் - 2

இந்தியாவில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க மற்ற வழிகளை பார்ப்போம்.

இந்தியாவில் வான்வழி போக்குவரத்து என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. தற்போது அதிகரித்திருப்பது போல் தெரிந்தாலும், இந்த பதிவுக்காக சில தகவல்களை தேடியபோது புள்ளிவிவரம் அதிர்ச்சியாக இருந்தது. 

இந்தியாவில் தினம் 2300 விமானம் கிளம்புகிறதாம். இதுவே அமெரிக்காவில் 42000. எவ்வளவு வித்தியாசம்?

எனவே உள்நாட்டு வான்வழி போக்குவரத்தை அதிகரிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு அரசுக்கு எந்த வரியும் தேவையில்லை என திறந்துவிட்டால் இந்த துறை கணிசமாக வளரும்.

இங்கே  ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். அரசுக்கு தற்போது அதிக லாபம் இருந்து அதை பணக்காரர்களுக்காக விட்டுக்கொடுத்தால் அது தவறு. இங்கே லாபமே இல்லை, எனவே இதுபோன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட துறை வளர்வதற்காக சலுகைகள் தருவது தப்பில்லை.

இந்த உள்நாட்டு டவுன் பஸ்களை ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களில் விட்டால் தாலி அறுந்துரும். இதற்கும் டவுன் பஸ்டாண்ட் என தனியாரையே BOT முறையில் கட்டி, இயக்க அனுமதி கொடுத்துவிடலாம். ஏற்கனவே சில சீர்திருத்தங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

ஆனால் மக்கள், அரசியல்வியாதிகள், சமூகப்போராளிகள் விடமாட்டார்கள். பணக்காரனுக்கு சலுகையா என கோஷம் எழுப்புவார்கள். ஆனால் நிஜத்தில் இது போன்ற சலுகைகள் ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்கு லாபத்தை கொடுக்கத்தான் போகிறது.

வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது பழம் தரும். இது கண்ணுக்கு தெரியும். அதற்காக காட்டில் மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் அது விரயம் என்று சொல்லமுடியுமா? அதுவும் மறைமுகமாக இயற்கையை பாதுகாத்து நமக்கு நன்மையை ஏதோ ஒரு வகையில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். அதுபோலத்தான் இதுவும்.      

மொத்தத்தில் இங்கே முக்கியமான இன்னொரு நீதி என்னவென்றால், வாழைமரமாக இருக்கட்டும், தென்னைமரமாக இருக்கட்டும், முதலில் வளரவிட வேண்டும், அதன்பின்தான் அறுவடை செய்யவேண்டும்.

ரயில்வே

அடுத்து ரயில்வே துறையை பார்ப்போம். போக்குவரத்தில் ஒரு புரட்சியை கொண்டுவந்தது இந்த ரயில்வே துறைதான். அதன்பின் உலகம் மாற மாற ரயில்வே துறையும் கொஞ்சம் வளர்ந்தது. மீட்டர்கேஜ் -ஸ்டாண்டர்ட் கேஜ் -பிராட் கேஜ் என உருமாறிய இந்த துறை சில அதற்கு மேல் உருமாறவில்லை.

முதல் காரணம், இதை உருவாக்கிய மேலை நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுக்குள் வர, அவர்களுக்கு போக்குவரத்துக்கு பெரும் தலைவலியாக மாறவில்லை.

அதேசமயம் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி,  இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களும் கணிசமாக பெருக, நீண்ட பிரயாணத்துக்கு விமானம், மற்றவற்றுக்கு கார்கள் என மக்களின் விருப்பம் மாறிவிட ரயில்வே வளரவில்லை. 

இருந்தாலும் உலகம் முழுக்க ரயில்வே தற்போதும் மிகப்பெரிய துறைதான். ஆனால் இங்கே நான் சொல்லவருவது, அதன் உருவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை  என்பதுதான்.

இது மேலை நாடுகளுக்கு சரி. ஆனால் நமது தேவை என்பது வேறு அல்லவா. பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரெண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு டயட்டில் இருந்தால் அது அந்த ஆளுக்கு பொருந்தும். பலவீனமாக இருப்பவன் கிடைத்ததை எல்லாம் சாப்பிட வேண்டியதுதான்.

தற்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளை கவனியுங்கள். மொபைல் துறை 1g என ஆரம்பித்து 5g என போய்க்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மாடிவீடு என்றுதான் இருந்தது. அது தற்போது வானத்தை தொடும் அளவுக்கு பல மாடிகளாக மாறிவருகிறது.

எனவே இந்தியாவின் தேவையையும் வளர்ச்சியையும் கருத்தில்  கொண்டு ரயில்வேயில் பிராட்கேஜ் டிராக்கை மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும். அல்லது பக்கவாட்டில் 10 சதவிகிதம் மேல்வாக்கில் 10 சதவிகிதம் என ரயில் பெட்டிகள் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என அப்படியாவது முயற்சித்திருக்கலாம். அப்படி எந்த ஆராய்ச்சியும் நடந்ததுபோல் தெரியவில்லை.

சில தனியார் பஸ்களை கவனியுங்கள். கீழ் குடோனில் கார்கோ சர்விசும், அதன் மேல் இரண்டு அடுக்குகள் கட்டி அங்கே பிரயாணிகள் என மூன்றடுக்கு சேவை நடக்கிறது. இது அவர்கள் பணம் என்பதால் ரூம் போடாமலேயே அவர்களுக்கு மூளை வேலை செய்கிறது.

இங்கே அப்பட்டமான எதார்த்தம் என்னவென்றால், நாளை சூரியன் மேற்கில் உதிக்கும் என்று சொன்னால் கூட நான்  நம்புவேன், ஆனால் அரசு துறைகள் திறமையாக செயல்படும் என்று சொன்னால் நான் நம்பமாட்டேன். அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏதோ ஒரு மூலையில் ஒரு துறை சிறப்பாக இருக்கலாம். 50 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு சில மாணவர்கள் பாஸாகிவிட்டால் அது நல்ல பள்ளி என சொன்னால் எப்படி இருக்கும், அப்படித்தான் இந்தியாவில் பொதுத்துறையை தூக்கிபிடித்துக் கொண்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் ரயில்வே போன்ற பிரமாண்டமான துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது சாத்தியமில்லாத, சிக்கலான ஓன்று. 

எனவே என்ன செய்யலாம்?

இங்கே நாம் ஒரு தனியார் துறையின் செயல்பாட்டை கவனிப்போம்.

மொபைல் துறை வந்த பிறகு அதற்கு பல இடங்களில் டவர் வைக்கவேண்டிய அவசியம் வந்தது. முதலில் அவர்கள் காலி இடத்தை வாங்கி/ வாடகைக்கு எடுத்து டவர் வைத்தார்கள்.

தனியார்துறை அல்லவா, போட்ட முதலீடு அவர்களுடையது, எனவே அவர்களுக்கு மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது. மொட்டை மாடியில் யாராவது அப்பளம் காயவைப்பதை பார்த்திருப்பார்கள். அட...மொட்டைமாடி பல வகைகளில் பயன்படும் போலிருக்கிறதே என யோசித்தவர்கள், அதற்கு வாடகை கொடுத்து டவர் வைத்துவிட்டார்கள். கீழே வைத்தால் அதற்கு செக்கூரிட்டி வேறு வைக்கவேண்டும். அந்த செலவும் மிச்சம். ஆக அவர்களுடைய செலவினங்கள் குறைந்தது.

அடுத்த சில வருடங்களில் மறுபடியும் மூளை கேள்வி கேட்டது. நம்ம டவர் கிழக்கு பக்கம் பார்க்கிறது, மற்ற திசைகள் சும்மாதானே இருக்கிறது என யோசித்தார்கள். கடைசியில் டவர் நிர்வாகம் என தனியாக துறை ஓன்று பிரிந்தது. அவர்கள்  ஒரே கல்லில், ஸாரி, ஒரே டவரில் நாலு கம்பெனி என வாடகைக்கு விட்டு மேலும் செலவை குறைத்தார்கள்.

அவர்களுக்கு மறுபடியும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. நம்ம டவர்ல சிக்னல் கெபாசிட்டி 1 லட்சம் என்றால் அதில் முழு பயன்பாடு இல்லையே, எனவே சில (மொபைல் துறையில் ஆரம்பத்தில் பல சிறு நிறுவனங்கள் இருந்தபோது) சின்ன கம்பெனிகளை, `உங்களுக்கு எதுக்கு டவர், வாங்க நம்ம வண்டியிலேயே ஏறிக்குங்க, கொடுக்கறதை கொடுங்கன்னு` அங்கேயும் காசு பார்த்தார்கள்.

மேலே சொன்ன சம்பவங்கள் தனியாரில் மட்டுமே சாத்தியம். இப்படியெல்லாம் அரசுத்துறையில் விரைவாக யோசித்து முடிவெடுத்து செலவை குறைப்பார்களா அல்லது கூடுதல் வ்ருமானத்துக்கான வழியைத்தான் தேடுவார்களா?

கிட்டத்தட்ட மொபைல் துறை செய்த அதே முறையை அரசும் ரயில்வே துறையில் கடைபிடிக்கலாம். கட்டமைப்பு என்னுடையது, வண்டி மற்றும் நிர்வாகம் தனியாருடையது என கொடுத்துவிட்டால் ரயில்வே நிர்வாகம் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு விரைவாக இருக்கும்.

இங்கே ரயில்வே அவ்வப்போது அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என ஆக்டிவாக காட்டிக்கொள்ளும். இதற்கும் என்னிடம் ஒரு அனுபவம் இருக்கிறது.

ஒரு வீட்டில் விருந்து. அவ்வளவாக அறிமுகமில்லாதவர் வீடுதான். இருந்தாலும் இதுபோன்ற அனுபவங்களுக்காக நானும் அதில் மாட்டிக் கொண்டேன்.

விருந்தினர்கள் சாப்பிடும்போது அந்த வீட்டின் கணவர்  ஜாலி மூடில் இருந்தார். அந்த மூடில், `ஏதோ உங்க புண்ணியத்துல நானும் இன்னிக்கி ருசியா சாப்பிடுறேன்` என்று ஜாலியாக மனைவியை கிணடலடித்துவிட்டார்.

விருந்தாளிகளுக்கு முன் அவமானமா... அவர் மனைவிக்கு வந்ததே கோபம், `அன்னைக்கி உங்களுக்கு நான் அதை (ஏதோ ஓன்று) செஞ்சி தரல?` என கோபமாக கேட்க...

`அது நடந்து 6 மாசம் இருக்குமே` என அவர் மறுபடியும் உண்மையை போட்டு உடைக்க, இப்போது அந்த பெண்மணிக்கு இதை எப்படி சமாளிப்பது என  தெரியவில்லை. விருந்து முடியும்வரை உம்மென்று இருந்தார். அங்கே மதுரை ஆட்சி போலிருக்கிறது.

சில வருடங்களுக்கு பின் ஒரு முறை அவரை பார்த்தேன். மனிதருக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. நார்மலாகத்தான் இருந்தார். ஒருவேளை வடிவேலு வகையறாவாக இருக்கவேண்டும். `நாங்க வாங்காத அடியா` என  பழகிப்போயிருக்கும்.

இந்தியன் ரயில்வே இந்த லட்சணத்தில்தான் செயல்படுகிறது. அவ்வப்போது மினிஸ்டர்கள் மாறும்போது நாங்களும் அதை அறிமுகப்படுத்தினோம், இதை செய்தொம் என பில்டப் வகையறத்தானே தவிர, ரயில்வேயின் முதலீடுக்கும் அதன் பிரம்மாண்டத்தையும் ஒப்பிடும்போது புருஷனுக்கு 6 மாசத்துக்கு ஒரு முறை பிடித்ததை செஞ்சி கெடுத்த கதைதான் ரயில்வேயிலும் நடக்கிறது.

மேலும் வரும்.

2 comments:

யோக்கியன் said...

தெளிவான கருத்து.ஆழமான சிந்தனை.இதே முறை தொடருக. . . . . . .


ஆரிஃப்.திருச்சி

ரா.சிவானந்தம் said...


வாங்க ஆரிப்,

கருத்துக்கு நன்றி.

Post a Comment