!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, November 1, 2012

சின்மயி vs ட்வீட்டர்

இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். மோசமான ட்வீட்களை ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட, நானும் படித்து தொலைக்க, இவர்களை பொதுவெளியில் சாத்த வேண்டும் என்று ஒரு பதிவில் கருத்தும் சொல்லிவிட்டேன்.

அப்புறம் இது குறித்து கருத்து சொல்வது (கடமை!) என்ற முடிவுக்கு வர, இருதரப்பு வாதங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

இனி பிரச்சினையை பாப்போம். சின்மயியிடம் சிலர் கருத்துக்கள் கேட்க, அவர் மறுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் சொல்லிய வேறு சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறது. இது போக வேறு சில விஷயங்களும் இருக்கிறது.

இங்கே சின்மயி தன்னுடைய ட்வீட்களை மறைத்திருக்கலாம். இவர்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சொல்லலாம்.

லாஜிக் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே அதற்கான சாத்தியம் குறைவு. சின்மயியும் இந்த ராஜன் அன் கோவும் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு சண்டை போடவில்லை. பொது தளத்தில்தான் சண்டை போட்டிருக்கிறார்கள்.

எனவே சின்மயி தவறான கருத்தை போட்டு டெலிட் செய்திருந்தாலும் அல்லது ஒரு அப்பாவியின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தினாலும், இவர்களை பாலோ செய்பவர்களில் 10 சதவிகிதம் பேராவது பொங்கி எழுவார்கள். அந்த அளவுக்காவது நடுநிலைமையாளர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். எனவே பொதுவெளியில் நடந்த இந்த விஷயத்தில் சின்மயி பொய்யான புகார் கொடுக்கும் வாய்ப்பு குறைவு.

அவர் பிரபலம் என்பதால்தானே இங்கே இந்த வேகம்?

இது இந்தியாவில் முரண்பாடுதான். ஆனால் தவறு செய்பவர்கள் `அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்` என்றா வாதாடுவது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், நம்மால் எதுவுமே செய்யமுடியாது.

இனி எந்த அரசியல்வாதியும் தண்டனை பெறமாட்டார். `ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் வெளியே இருக்க எனக்கு மட்டும் தண்டனையா` என்று எதிர்வாதம் செய்வார்.

கருத்து 

இங்கே அகமதாபாத்தில் பேப்பர், புக் எதுவும் கிடைக்காமல் புலம்புவது வழக்கம். இப்படி ஒரு நாள் புலம்பும்போது ஒருவரிடம் பெருமையாக சொன்னேன். `தமிழ்நாட்ல நாங்க காலையிலே பேப்பர் படிச்சி அறிவு வளக்கறது பத்தாதுன்னு, சாயங்காலம் பேப்பர் வரும், அதையும் வாங்கி படிப்போம்` என்றேன்.

`அதெல்லாம் வேலை இல்லாதவங்க செய்யறது`ன்னு பதில். இதை சமாளிப்பதாக நினைத்து, `தமிழ்நாட்டில் அரசியல் ஆர்வம் அதிகம் அதனால் வாசிப்பும் அதிகம்` என்றேன்.

`அரசியலுக்கு யார் போவா.. உருப்படாதவங்கதான் போவாங்க` என்று அதற்கும் ஒரு பதில். நான் வாயை மூடிக்கொண்டேன். சராசரி மனிதர்களிடம் அரசியல் பேசினால் இப்படித்தான் பதில் வரும்.

எனவே யாரிடம் கருத்து விவாதம் செய்யவேண்டும் என கவனிக்க வேண்டும். சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தால், மாற்றங்களை கொண்டுவரும் அளவுக்கு முக்கியமானவர்களாக இருந்தால் விவாதிக்கலாம். ஆனால் பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் பின்னால் போய், இப்போது அவர்கள் பிரபலம் என்ற பலத்தை காட்டும்போது புலம்புவதில் என்ன பயன்?

அதிலும் ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதன் பின்னே இரண்டு செய்திகள் இருக்கிறது. ஓன்று, அவர் தான் விரும்பிய துறையை ஆழமாக கவனிக்கிறார். இரண்டு, அதன் காரணமாகவே பிற துறைகளை கவனிக்க அவருக்கு நேரமில்லை (சாத்தியமில்லை). இப்படிப்பட்ட நிலையில் பிற துறைகள் பற்றி கருத்து சொல்வதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

அவரிடம் யாராவது கருத்து கேட்டு அவர் இவர் இப்படிப்பட்ட (அரசியல்) தத்துவங்களை உதிர்திருந்தால், இங்கே சொன்னவரை விட கேட்டவர்தான் முட்டாள்.

இருந்தாலும், சின்மயியின் குறைகளை அறியாமை என ஒரே வரியில் அடக்கிவிடலாம். மற்றவர்கள் அப்படி அல்ல. வயது, கல்வி அனுபவம் என அனைத்திலும் சின்மயியை விட மேலே இருப்பவர்கள்.

பாடம் 

சிறையில் பழக்கமான ஒரு நண்பர், அவருடைய ஒரு நண்பருக்கு என்னைப்பற்றி சொல்லி என் நம்பரை கொடுத்து இருக்கிறார். அவர் புத்தகம் எழுதுகிறாரோ அல்லது ஏதாவது ஆராய்ச்சி செய்கிறாரோ, ஒரு விஷயம் குறித்து போனில் கருத்து கேட்டார்.

`நான் எந்த ஒரு விஷயத்தையும் எழுதி வைத்துக்கொள்வேன். பின்னர் சில நாட்கள் கழித்து படித்து திருத்திய பிறகுதான் வெளியிடுவேன். எனவே போனில் கருத்து சொல்லமுடியாது` என்று சொல்லி, அவருடைய மெயில் ஐ டி வாங்கி `கருத்தை` அனுப்பினேன்.

ஏடாகூடமாக சொல்லி மாட்டிக் கொண்ட அனுபவம் எனக்கு கிடையாது. அவர் கருத்து கேட்டதும் சிக்கலான விஷயம் கிடையாது. இருந்தாலும் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்தால் அதில் நாம் செய்த ஏதாவது ஒரு செயலுக்காக/வார்த்தைகளுக்காக வருத்தப்படும் சில நிகழ்வுகளும் இருக்கும். அந்த வகையில் நான் வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்.

இங்கே சின்மயி மட்டுமில்லை, ஆனானபட்ட ப சிதம்பரமே விலைவாசி உயர்வோடு மினரல் வாட்டரை ஒப்பிட்டு மாட்டிக் கொண்டார். அவ்வப்போது யாராவது ஒருவர் இப்படி சொற்களை சரியாக பயன்படுத்தாத சிக்கலில் மாட்டிக் கொள்வதையும் கவனிக்கிறோம்.

இப்படி பல உதாரணங்கள் இருந்தாலும், தீயினால் சுட்ட புண் உள் ஆறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு என திருவள்ளுவர் பழமொழிகளை எழுதி வைத்தாலும், நேரடியாக தலைவலியை நாம் அனுபவிக்காத வரையில் பழமொழிகள் பழமொழிகளாகத்தான் இருக்கும், அது பாடமாக மாறாது. இந்த சம்பவம் இனி எல்லோருக்கும் நல்ல பாடமாய் அமையட்டும்.

இது தவறுதான் 

இங்கே இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நெகடிவ் பப்ளிசிட்டி கொடுக்கப்பட்டதில் எனக்கும் உடன்பாடில்லை. ஒருவர் முதல் முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, அதுவும் மிகப்பெரிய குற்றமாக இல்லாதபட்சத்தில், குற்றம் ஊர்ஜிதமாகும் வரை அவர்களை கைது செய்யக் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு. சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவில் இதை குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் இப்படி அனாவசிய கைதுகள் கூடாது என்ற ஒரு சட்டம் வந்தால், அதை கடுமையாக எதிர்ப்பது வக்கீல், போலீஸ், நீதிபதிகளாகத்தான் என்றும் எழுதி இருந்தேன். அவர்களுடைய இல்லீகல் வருமானத்தில் பெரும்பகுதி இதில்தான் வருகிறது.

எனவே இந்த பிரச்சினையின் மூலம் இது போன்ற அபத்தங்கள் விவாதத்துக்கு வந்து, இந்த கைதுகளும் முடிவுக்கு வந்தால், ஒரு அனாவசிய பிரச்சினை ஒரு நல்ல மாற்றத்துக்கு வழிவகுத்தது என சந்தோஷப்படலாம்.

கடைசியாக...

இந்த வாதங்களை கவனித்தால் ஒரு விஷயம் புரியும். இவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சிலருக்கு அருவெறுப்பாகவும் சிலருக்கு  சாதாரண வார்த்தை பிரயோகமாகவும் தெரிகிறது. ஒரு நாட்டில் ருசியான உணவாக கருதப்படுவது இன்னொரு நாட்டில் வாந்தியை வரவழைக்குமே,  வார்த்தைகளும் அப்படித்தான் போலிருக்கிறது. 

சிறையில் தொடர் குற்றவாளிகளிடம் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பின்னர்  பிளாக் மாறிய பிறகு, அந்த பிளாக் அனுபவங்களை இந்த பிளாக்கில் ஒருவரிடம் பகிர, அவர் ஒரு கருத்தை சொன்னார். கிட்டத்தட்ட அதே கருத்தை பல வருடங்களுக்கு முன் கடலூரிலும் ஒருவர் சொன்னார்.அந்த அடிப்படையில் பார்த்தால் இது முதல் முறை என்பதால் இந்த ட்வீட்டர்களை எச்சரித்து விட்டுவிடலாம்.

என்னிடம் அவர்கள் சொன்ன கருத்து லாஜிகோடு ஒட்டிபோகும் சாதாரண விஷயம்தான். அந்த கருத்தை நான் சொன்னால் சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிலர் சண்டைக்கு வரலாம். எனவே நான் சொல்லப்போவதில்லை. நீங்களும் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். அடித்து கேட்டாலும் சொல்லிவிடாதீர்கள்.        

11 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

//இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். //

மூழ்கி திளைத்து , அப்புறம் உணர்ந்து எழுதினாப்போல ஒன்னும் தெரியலையே :-))

ஒரு வேளை ரொம்ப பாதுகாப்பாக எழுதினிங்களோ?

வர வர எல்லாம் பாதுகாப்பாக கருத்து சொல்ல ஆரம்பிச்சுடாங்க :-))

சரி விடுங்கோ ,பிராபல்யத்துக்கு எதிரா பொழுது போக்கா பிலாக் எழுதுறவங்க எல்லாம் கருத்து சொல்வது கஷ்டம் தான் , நானும் இனிமே சினிமா விமர்சனம் எழுதி பொழுது போக்கலாம்னு ஒரு ஐடியா!!!!

சிவானந்தம் said...

வவ்வால்,

மற்றவர்கள் தவறு செய்யவில்லையா என்ற வாதம் கூடாது. நீங்கள் நல்லவனாக இருக்க முன்னுதாரணம் தேடினால், உங்களால் ஒருபோதும் நல்லவனாக முடியாது.

பத்திரிகையில் ஒரு கடிதம் படித்தேன். தன் பெண்ணை பார்க்க வந்தவர்களிடம் அந்த பெண்ணின் தாய் சொன்னாளாம். `என் பொண்ணு பிடிக்கலன்னா சொல்லுங்க, நீங்க நல்ல இடமா இருக்கீங்க. எங்க சொந்தத்துல வேற பொண்ணுங்க இருக்கு, `

எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தை. ஏழைகளுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதற்காக யாருக்கும் கிடைக்கக்கூடாது என்றா சொல்வது? இப்போது வாதங்கள் அப்படிதான் இருக்கிறது.

//மூழ்கி திளைத்து , அப்புறம் உணர்ந்து எழுதினாப்போல ஒன்னும் தெரியலையே //

எது சரி எது தவறு உணர்வது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நீங்கள் நினைப்பதைதான் நானும் நினைக்கவேண்டும் என்றால், அந்த உணர்வு எனக்கு வரவில்லை.

///வர வர எல்லாம் பாதுகாப்பாக கருத்து சொல்ல ஆரம்பிச்சுடாங்க//

இதுவே லாபம்தானே. ஏன்னா இப்ப எது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தைன்னு அகராதி போடவேண்டிய சூழ்நிலை வந்துடிச்சு.

அதேசமயம் சரின்னுபட்டா துணிச்சலா சொல்லுவோம். நாங்கதான் ஜெயில பாத்துட்டோமே...

//சரி விடுங்கோ ,பிராபல்யத்துக்கு எதிரா பொழுது போக்கா பிலாக் எழுதுறவங்க எல்லாம் கருத்து சொல்வது கஷ்டம் தான் , நானும் இனிமே சினிமா விமர்சனம் எழுதி பொழுது போக்கலாம்னு ஒரு ஐடியா!!!!///

உங்களுக்கு பரவாயில்ல எல்லா துறையிலும் கலக்கறீங்க. நம்மபாடுதான் திண்டாட்டம்.

சிவக்குமார் said...

வணக்கம், எனக்கு சின்மயி புகார் அளித்தது தவறாகத் தெரியவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட நபர் ந்ரூபிக்கப்படாத குற்றத்திற்காக தவறான சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுதான் பிரச்சனை. அவர்கள் பொதுவெளியில் பேசியது மன்னிக்கக்கூடியதாகக் கருதலாம். கட்சிக் கூட்டங்களில் இதை விட மோசமாக மேடையில் பேசுவார்கள். ஆனால் ஒரு பெண்ணை தொடர்ந்து பகடி செய்திருக்கிறார்கள் என்பதால் இதை சரியென்று சொல்ல முடியாது. எனது பதிவு

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்

வவ்வால் said...

சிவானந்தம்,

//அதேசமயம் சரின்னுபட்டா துணிச்சலா சொல்லுவோம். நாங்கதான் ஜெயில பாத்துட்டோமே...
//

உங்களை ஒரு துணிச்சலான முன் மாதிரியாக தான் எப்பொழுதும் பார்ப்பது வழக்கம், அதனால் தான் உங்க கிட்டே இருந்து அதிகம் எதிர்ப்பார்க்கிறேனோனு தோனுது, மற்றபடி உங்களை கிண்டல் செய்ய அப்படி சொல்லவில்லை, அப்புறம் ஏற்கனவே சொன்னது போல நான் அந்த நேரத்தில் என்ன நினைக்கிறேனோ அதை மறைக்காமல் சொல்லிவிடுவது ,இதனால் பல நேரங்களில் எனக்கு தான் வம்பாகிடுது.

மனசுக்குள்ள ஒன்ன நினைச்சுகிட்டு வெளியில ஒன்றை சொல்ல /கட்டுப்படுத்திக்கொள்ள இன்னும் கற்றுக்கொள்ளவில்லை :-))

//பத்திரிகையில் ஒரு கடிதம் படித்தேன். தன் பெண்ணை பார்க்க வந்தவர்களிடம் அந்த பெண்ணின் தாய் சொன்னாளாம். `என் பொண்ணு பிடிக்கலன்னா சொல்லுங்க, நீங்க நல்ல இடமா இருக்கீங்க. எங்க சொந்தத்துல வேற பொண்ணுங்க இருக்கு, ` //

நல்ல மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் போல.

பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதம் கூட படிச்சிடுவீங்க போல இருக்கே,ஒரு காலத்தில் நானும் அதான் செய்துகொண்டு இருப்பேன், ஹி...ஹி ஏன்னா நானும் கடுதாசி எழுதி போடுவேன்ல :-))
---------------
தருமி அவர்களின் இப்பதிவை பாருங்கள், உங்கள் ஆதரவு அவசியம் தேவை.

http://dharumi.blogspot.in/2012/11/600.html

நன்றி!

ராஜ நடராஜன் said...

சுருக்கமாக சிவா போடலாமென்று பார்த்தால் உங்களுக்கு போட்டியா இன்னொரு சிவா இருப்பதால் நெடிலாக சிவானந்தம்!

இவர்களை போட்டு சாத்த வேண்டுமென்ற உங்கள் பின்னூட்டத்துக்கு தினத்தந்தி,குமுதம் கிடைக்கிறதா என பார்க்கிறேன் என இக்பால் செல்வன் பதிவில் உங்களுக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.முந்தைய சூழலில் தினசரி,வாராந்தர பத்திரிகைகளோடு,அரசு சார்பாக வானொலி,தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே ஊடக தகவல்களாக இருந்தது என்ற போதிலும் மக்கள் அரசியல்,துணுக்கு,நகைச்சுவை,சிறுகதை,கார்ட்டூன் என்பவற்றில் பத்திரிகை ஆர்வம் காட்டியதோடு தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும்,மலரும் நினைவுகள் எனவும் வானொலியில் திரைப்பட பாடல்களுக்கும்,கிரிக்கெட் கமெண்டரிக்கும் ஆர்வம் கொண்டார்கள்.இவற்றிற்கு மேலாக அரசியலை மேடைப்பேச்சுக்கள் தீர்மானித்தது.அனைத்துக்கும் மேலாக ஒரு தனிமனிதனின் சிந்திக்கும் திறன்,கருத்தை நேருக்கு நேராக பேச்சு மூலமாக டீக்கடை பெஞ்சு,சிகையலங்கார கடை,நடந்து கொண்டே பேசி விமர்சனம் செய்தல் என கருத்து வெளிப்பாடே முக்கியமாக இருந்தது.

கருத்துக்கள் காற்றோடு போனாலும் கூட அவற்றை ஐந்தாண்டுக்கு ஒரு முறையென்ற தேர்தல் தீர்மானித்தது.இன்றைக்கு காற்றைப் பிடித்து கருத்துப்பெட்டிக்குள் அடக்கி விட்டதால் காற்றான பேச்சு நாளைக்கும் பதிவாகிப் போனது.

சொற்பிரயோகங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை சாரு நிவேதிதாவிடமிருந்து துவங்குவோம்.பின் திரைப்படங்களின் சொல்லாடல் வசனங்களையும்,இரட்டை அர்த்த நகைச்சுவைகளுக்கும் வரையறை செய்யட்டும்.

காசென்றால் தவறுகளும் கூட நியாயமாகிப் போய் விடும் நிலபிரபுத்துவ முறையே இன்னும் நம்முள் ஒளிந்து கொண்டு மாற்று உருவாக முகப்பூச்சு போட்டுக்கொண்டு சுற்றுகின்றது.

யாரிடம் கருத்து விவாதம் செய்ய வேண்டுமென்று பின்புலம் நோக்கி கருத்து தெரிவித்தால் அது கருத்துரிமையல்ல என்ற போதிலும் தான் பிடி முயல் இரண்டே முக்கால் கால் என்ற கருத்தாளர்களும் இருப்பதால் தொடர் விவாதங்களில் கருத்து பின்புலம் நோக்குவதும் அவசியமே.

பதிவுகளில் கருத்து பரிமாறல் செய்யும் வக்கீல் கூட சட்டம் என்ன சொல்கிறது என்று சொல்கிறாரே தவிர சட்டத்தை புறம்பாக உபயோகிப்பதை விமர்சிப்பதில்லை.

இறுதியாக சின்மயி புகார் விசயத்தில் ராஜன் சார்ந்து கருத்து சொல்பவர்களும் கூட சொற்பிரயோக மீறல்களை தவறு என்று கருத்து சொன்னாலும் சின்மயி தரப்பு கருத்தாளர்கள் யாரும் சின்மயி மீறிய சமூகம் மீதான கருத்துக்களை விமர்சனம் செய்வதாக காணோம்.சின்மயிக்கு வக்காலத்தாக சாரு நிவேதிதா,ஷோபா சக்தி போன்ற போலி பெண்ணியவாதிகளும் கருத்து சொல்வதோடு இன்னும் சிலர் சின்மயி சார்ந்து சொற்பிரயோக மீறல்களை செய்வதையும் யாரும் பொருட்படுத்துவதில்லை.

ராஜன் கைது மீதான விமர்சனங்கள் ஒருபுறமிருக்க சுப்ரமணியன் சாமி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சொன்னதான ஊழல் புகாருக்கு ட்விட் செய்த ரவி சீனிவாசனின் கைதை எந்த விதத்தில் நியாயப்படுத்துவது?

சிவானந்தம் said...

வவ்வால்,

ஆரம்பத்தில் உங்கள் பின்னூட்டங்கள் அப்படி ஒரு உணர்வை வரவழைத்தது உண்மை. மற்றவர்களுடைய பதிவுகளிலும் நீங்கள் இப்படித்தான் பின்னூட்டமிடுகிறீர்கள். அது சில இடங்களில் உங்களுக்கு எதிரியை உண்டு பண்ணினாலும், நான் அதை பொருட்படுத்துவதில்லை. நீங்கள் ஒரு ஆரோக்கியமான நண்பர் /விமர்சகர் என்ற அளவில்தான் பார்கிறேன்.

இந்த சின்மயி மற்றும் அரசியல் விஷயங்களில் நம் இருவருக்கும் எந்த லாபமும் இல்லை. இந்த நாட்டின் மீதுள்ள அக்கறையால் இது சரி, அது சரி அல்ல என கருத்துக்களை கொண்டிருக்கிறோம். அதில் சில இடங்களில் முரண்படுகிறோம். அவ்வளவுதான்.

மற்றபடி நானும் உங்கள் பதிவின் வாசகன். உங்கள் வேகம், நையாண்டி எல்லாம் என்னை ஆச்சர்யபடுத்துபவை.

தருமி அவர்களின் பதிவை படித்தேன். இப்படி முட்டாள்தனமான சட்டங்கள் நிறைய இருக்கு. இது தற்போது கவனத்துக்கு வந்திருக்கு. பொது பதிவை தயார் செய்யட்டும். அனைவரும் வெளியிடுவோம்.

ராஜ நடராஜன் said...

//பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதம் கூட படிச்சிடுவீங்க போல இருக்கே,ஒரு காலத்தில் நானும் அதான் செய்துகொண்டு இருப்பேன், ஹி...ஹி ஏன்னா நானும் கடுதாசி எழுதி போடுவேன்ல :-))//

வவ்வால்!நாம வாழ்க்கையில் சமூக உணர்வோடு கடிதாசி போட்ட ஒரே ஒருவர் காணாமல் போன மக்கள் சக்தி இயக்கம் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மட்டுமே!அதுதான் இந்த ஆட்டம் போல:)

சிவானந்தம் said...

வாங்க நடராஜன்,

///தினத்தந்தி,குமுதம் கிடைக்கிறதா என பார்க்கிறேன்///

இங்கே அகமதாபாத்திலா? பேப்பர் கிடைப்பதில்லை. வார இதழ்களில் அரசியல் தவிர எதையும் விரும்புவதில்லை. அது கிடைகிறது. தாமதமாக

///சின்மயி தரப்பு கருத்தாளர்கள் யாரும் சின்மயி மீறிய சமூகம் மீதான கருத்துக்களை விமர்சனம் செய்வதாக காணோம்.//

அவை அபத்தமானவைதான். ஆனால் இரண்டு பேர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது ஒப்பிடல் தியரி வரும். இவர்களின் அநாகரீகமான வார்த்தைகள் சின்மயின் குற்றத்தை, குறை என்ற அளவுக்கு மாற்றிவிட்டது.

இவர்களின் அநாகரீகமான வார்த்தைகள் கூட சில `விஷயங்களின்`அடிப்படையில் பார்த்தால் எச்சரித்து மன்னித்து விடக்கூடியவைதான். அந்த `விஷயத்தை` இப்போது சொன்னால் தலைவலி வரும். பின்னர் பாப்போம்.

/ரவி சீனிவாசனின் கைதை எந்த விதத்தில் நியாயப்படுத்துவது/

தருமி பதிவில் paaserby க்கு நீங்கள் சொன்ன பதில்தான் என் பதிலும். இந்த கைது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஒரு முரண்பாடான சட்டம் கவனத்துக்கு வந்திருக்கிறது. அதை எதிர்த்து பொது பதிவு வெளியிட்டால், எந்த வகையிலாவது போராடினால், நானும் வெளியிடுவேன் /கலந்து கொள்வேன்

வருண் said...

ஓரளவுக்கு நியாயமாக எழுதி இருக்கீங்க, அதனால் காரசாரமாக இல்லை. நியாயம் என்றுமே பலருக்கு ருசிக்காது!

தவறுதான் ஆனால் இதற்கு தண்டனை என்ன கொடுக்கலாம்? மன்னித்து, இதுபோல் இனிமேல் தொடர்ந்து செய்தால் தண்டனை உறுதி என்று அதோட "சட்டம்" நின்றிருக்கலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னித்துவிடுவதே, "பிரபலத்திற்கும்" நல்லது என்பதே உண்மை.

மற்றபடி, சின்மயியை எதிர்த்து ராஜன் தரப்பில் தவறில்லை என்று சப்பைக்கட்டி, நியாயப்படுத்தி, சின்மயிதான் உண்மையான குற்றவாளி என்பதுபோல் பேசும் பதிவுகள் "எந்தத்தரப்புக்கு" உண்மையிலேயே உதவும் என்பது எனக்குத் தெரியவில்லை. It could backfire too!

சிவானந்தம் said...

வாங்க வருண்,

//தவறுதான் ஆனால் இதற்கு தண்டனை என்ன கொடுக்கலாம்? மன்னித்து, இதுபோல் இனிமேல் தொடர்ந்து செய்தால் தண்டனை உறுதி என்று அதோட "சட்டம்" நின்றிருக்கலாம்.//

இதுதான் இந்த பிரச்சினைக்கு சுபமான முடிவு. அதேசமயம் இது இரண்டு தரப்பிற்கும் பொருந்தும்.

/It could backfire too!/

சில சமயங்களில் அப்படி ஆகிவிடும். நான் கூட கடைசியாக சொல்லமாட்டேன் என்று மறுத்த ஒரு விஷயம் ராஜன் அன் கோவிற்கு ஆதரவானதுதான். அது பேக் ஃபைர் ஆகும் வாய்பிருந்ததால் மௌனமாகிவிட்டேன்.

வேகநரி said...

//நான் கூட கடைசியாக சொல்லமாட்டேன் என்று மறுத்த ஒரு விஷயம் ராஜன் அன் கோவிற்கு ஆதரவானதுதான்//
சிறை மீண்ட செம்மல்களுக்கு தமிழகத்தின் தமிழ் வீரார்கள் விழா எடுக்கும் நிலையிருக்கும் போது உங்க நிலமையை புரிந்து கொள்கிறேன்.அதே மாதிரி பாகிஸ்தானில் மத அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்கும் நல்லவர்கள் குரல் பல எப்படி மவுனமாக்கபடுகிறது என்பதையும் விளங்கி கொள்கிறேன்.

Post a Comment