!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, January 19, 2022

கிரிப்டோ கரன்சி


ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான். 

ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது  இப்படி  விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும். 

இப்படி  உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ? 

கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.

கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI  என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.

தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள்  தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால்  வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.

இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன். 

பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது. 

அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல்  நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.

கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.

அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது.  எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.

அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத  கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை  வந்தது.

கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.

ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ.   இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?

இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.

Friday, January 7, 2022

இங்கே முதலீடு தேவை




சீமானை பற்றி பதிவு எழுதியதால் அவர் குறித்த செய்திகளை இந்த வாரம் அதிகமாக கவனித்தேன். சிந்தனை இப்படியும் அப்படியுமாக ஓடியது. அதில் ஒரு எதார்த்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.

தற்போது அவருக்கு சொத்தோ அல்லது வேறு நிரந்தர வருமானமோ இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் அவர் ஒரு கட்சியின் தலைவர். இடைவிடாது பிரச்சாரம் அல்லது கட்சி வேலை என ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்; செய்தாக வேண்டும். இதற்கான செலவை கட்சி நிதியிலிருந்து செலவழிக்கலாம். ஆனால் குடும்பம், குழந்தைகள் என இருக்கிறதே, அதற்கான செலவுகள் இருக்குமே, அதற்கு என்ன செய்வது?

மனைவிக்கு மல்லிகை பூவோ, குழந்தைக்கு பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்றால் அதற்கு கட்சி நிதியிலிருந்தே செலவு செய்தால் விமர்ச்சனம் வரும். அல்லது `உனக்கு பூ வாங்க வேண்டும், அதற்கு பணம் கொடு` என்று மனைவியிடம் கேட்கதான் முடியுமா?

ஆக நிச்சயம் அவர் தற்போது ஒரு  உளவியல் சிக்கலில் இருப்பதுபோல் தோன்றுகிறது. `நாட்டை அடைய துடிக்கும் எனக்கு,  ஒரு வீடு இல்லை என்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று பிழை` என்று கொஞ்சம் அதிகப்படியாக பேசியிருக்கலாம். அதேசமயம் இந்த வார்த்தைகளை அவர் பேசியபோது அவருடைய முகபாவனையை நீங்கள் கவனித்திருந்தால் அதில் ஒரு இயலாமை இருந்ததை கவனித்திருக்கலாம்.

பல வீடுகளில் இது நடக்கும். கணவனையோ, மாமியாரையோ திட்டமுடியாத பெண்கள் வீட்டில்  சாமானை கழுவும்போது சத்தம் அபாரமாக இருக்கும். பிள்ளைகளை அற்ப காரணங்களுக்காக  அடிப்பார்கள். இவையெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு. மனஅழுத்தத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளை கவனித்தால்  இப்படி எதாவது ஒரு வகையில் இருக்கும். சீமான் பொது மேடையில் செருப்பை தூக்கி காட்டியபோது இவருக்கும் அப்படி எதாவது மனஉளைச்சல் வந்துவிட்டதா என ஒரு சந்தேகம். 

உடம்பில் பலம் இருக்கும் மனிதனை விட பாக்கெட்டில் பணம் இருக்கும் மனிதன் கொஞ்சம் அதிக தெம்போடு இருப்பான். பணம் உள்ளவனைத்தான் இந்த உலகமும் மதிக்கும். இதுதான் எதார்த்தம். சீமானின் வாழ்க்கை முறையை கவனிக்கும்போது அவரிடம் பணம் இல்லை. அந்த இயலாமை காரணமான கோபம் அவருடைய வார்த்தைகளில் செயலில் தெரிகிறது.

இங்கே மீடியாவில் காட்டப்படும் சொத்துக்கள் அவருடைய மனைவி மற்றும் மாமியாருடையது. இதற்கான நிதியை இவர் கொடுத்திருந்தால் இவர் மீது பழிபோடுவதில் அர்த்தம் இருக்கும். அப்படி ஒரு தகவலும் தெரியவில்லை. 

தனக்கு வீடு இல்லை என்பவர் மனைவியின் சொத்தை விற்று வாங்கலாமே என்பதுதான் கேள்வி. ஆனால் அது தன்மானத்துக்கு இழுக்கு அல்லவா. நம் சொத்து என்பது வேறு மனைவியின் சொத்து என்பது வேறு. இது எதார்த்தம் புரியாதவர்களின் வாதம்.

இங்கே நாம் ஒரு எதார்த்தத்தை கவனிக்க வேண்டும். சேவை எப்போதும் இலவசமாக கிடைக்காது.  நாட்டுக்கு ராணுவத்தினர்/ஆசிரியர்கள் சேவை செய்கிறரர்கள். அதாவது அவர்கள் அப்படி சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் சம்பளம் கிடைக்கிறது. அவ்வளவு ஏன், என்ஜிஓ என பலர் சமூக சேவை செய்கிறார்கள். 10 பேருக்கு நல்லது செய்கிறேன் என்று 12 பேரிடம் வசூலிப்பார்கள். அந்த 2, நிர்வாக செலவு என சம்பளமாக /கிம்பளமாக போய்விடும்.

எங்கே நாம் செய்த வேலைக்கு (சற்று கூடுதலாகவே) கூலி வாங்கிக்கொள்கிறோமோ அங்கே அதை சேவை என சொல்லக்கூடாது. ஆனால் அப்படி சொல்லிக்கொள்வதில் இவர்களுக்கு பெருமை. ப்ரீபெய்ட் சர்வீஸ் என்று சொல்வார்களே அதுபோல் இவர்களுடையது வெல் பெய்டு சர்விஸ் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளுக்கு அப்படி எதுவும் கிடைப்பதில்லை.
 
இங்கே பதிவுலகில் ஒரு பதிவர் சத்தமே இல்லாமல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து பொது சேவை செய்தார்; பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இப்போது என்னவாயிற்று? இதுதான் நிஜம். சேவை செய்ய பணம் கொடுப்பது மட்டுமில்லை, அதற்காக நாம் நேரம் ஒதுக்குகிறோமே, அதற்கும் ஒரு விலை உண்டு. அதுவும் குடும்பம், கடமை என உள்ளவர்களுக்கு இது மேலும் கடினம். அது கிடைக்காதபட்சத்தில் இப்படித்தான் போய் முடியும்.

அரசியல்வாதிகளுக்கோ இது இன்னும் ஒரு படி மேல். நீங்கள் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்றால் ஏழைகள்தான் உதவிக்கு  உங்களை நாடி வருவார்கள். பணக்காரர்கள் அவர்களாகவே பார்த்துக்கொள்வார்கள். இப்படி வரும் ஏழைகளிடம் பணமும் இருக்காது. அவர்களுக்கு காபியே நீங்கள்தான் வாங்கி கொடுக்க வேண்டும்.

கொடுக்காவிட்டால், `ஏழைகளுக்கு பத்து காசு செலவு செய்யமாட்டான், இவனுக்கு நான் ஒட்டு போடணுமா?` என கேட்பார்கள். ஆக உங்களுக்கே பால் வாங்க காசில்லை என்ற நிலையில், இது அவர்களுக்கு கூடுதல் தலைவலி. இங்கே ஊழல் செய்து, அந்த பணத்தில் மக்களுக்கு 100 ரூபாயை கொடுப்பவன் நல்லவனாகிவிடுவான். அது இதைவிட பெரிய கொடுமை.

தற்போது சீமானுக்கு கூட்டம் கூடுகிறது, ஆனால் அது ஓட்டாக மாறுவதில்லை.  நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அங்கே பலனும் வேண்டும் கூடவே பணமும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று சுவைக்காது. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். திருமணமானவர்களுக்கு 6 மாதம் ஹனிமூன். தொழில் செய்பவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு லாபம் வராது அதன் பின் வரும் என்பதும் ஒரு நிலை. அதேபோல் அரசியல் தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள காலஅவகாசம் இருக்கும். இவர் இந்த வாசற்படியையும் தாண்டிவிட்டார். இனி அவர் தனித்து நிற்பதும் சிரமம், கூட்டணி அமைப்பதும், ஒரு கூட்டணியில் சரணடைவதும் சிரமம். இதன்காரணமாக நிதி கொடுப்பவர்களும் களைத்து போயிருப்பார்கள். எனவே அங்கேயும் ஏதாவது `குறை` வந்திருக்கலாம். 
   
சரி,  இப்போது தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்ன செய்கிறார்? நிதி எந்த வகையில் வந்தாலும் அதை தன்னுடைய தனிப்பட்ட/ குடும்ப செலவுக்காக அவர் பயன்படுத்த முடியுமா? அந்த தவறை ஓரளவு செய்தாலும், இது எவ்வளவு நாள் தாங்கும்? வாழ்க்கை முழுக்க இப்படி தொணடர்களை நம்பியோ அல்லது குற்றஉணர்ச்சியோடு ஒரு மனிதன் வாழமுடியுமா? 

ஆக மொத்தத்தில் இங்கே அரசியல்வாதிகள் ஜாப் செக்யூரிட்டி என்ற நிலை இல்லாமல் வாழ்கிறார்கள். இதுதான் நிஜம். ஆரம்பத்தில் அட்டகாசமாக கனவுகளோடும், வாய்சவடாலோடும் ஆரம்பிக்கும் இந்த பயணம், பின்னர் களைத்துப்போய்  தடுமாறும்போது ஊழல் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் கை கொடுக்க, கடைசியில் இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளின் இந்த அடிப்படை பிரச்சினையை தீர்க்காதவரையில் இந்தியாவில் ஊழல் ஒழியப்போவதில்லை.
 
இங்கே என்ன செய்யவேண்டும்.

தற்போது அரசு பல்வேறு இடங்களில் எதிர்கால நோக்கில் முதலீடு செய்கிறது. நன்கு படிக்கும் மாணவனுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அந்த மாணவன் படித்து பட்டம் பெற்று நாட்டுக்கு நன்மை செய்வான் என நம்பிக்கை. ஆனால் அதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் வேலை தேடுவார்கள் அல்லது ஓட்டு போடுவதால் என்ன பயன் என வியாக்கினம் பேசுவார்கள். ஆனாலும் அரசு நிச்சயம் மாணவர்கள் மீது முதலீடு செய்யும். அது கடமை. 

இதேதான் விளையாட்டு துறையிலும் நடக்கிறது. தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பலவேறு வகைகளில் உதவி செய்கிறது. அவர்கள் விளையாட்டில் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே உதவி செய்யமுடியுமா? இங்கே 10 பேருக்கு கொடுப்போம் அதில் ஒருவன் சாதித்தாலே அது நல்ல அறுவடைதான்.

அரசியலிலும் அதேபாணியை கடைபிடிக்க வேண்டியதுதான். ஒட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் முதல் 5-7 அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அரசே கவரவமான மாத சம்பளம்  கொடுக்கலாம். தற்போது எதிர்க்கட்சி தலைவரை மட்டும் அரசு அங்கீகரிக்கறது. ஆனால்  இப்படி மேலும் 5 கட்சிகளை ஓரளவாவது ஆதரிக்க வேண்டும். இது ஒரு நல்ல முதலீடாக மாறலாம்.

`அரசியல்வாதிகள் நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு எதற்கு பணம்` என கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் நமக்கான தேவைக்காக மட்டும் கை நீட்டுவோம் என சிம்பிளாக ஆரம்பிக்கும் இந்த தவறுதான் கடைசியில் அவர்களை மெல்ல மெல்ல ஊழல் பெருச்சாலிகளாக மாற்றிவிடுகிறது. எனவே அவர்களின் அடிப்படை தேவையை ஓரளவு அரசு கொடுக்குமேயானால் இது ஓரளவுக்காவது நேர்மையான அரசியல்வாதிகளை தடுமாறவிடாமல் தடுக்கும்.

அதேசமயம் சீமான்  சிறந்த நிர்வாகியாகவோ உருப்படியான தலைவராகவோ எனக்கு தோன்றவில்லை. இவர் வைகோ நம்பர் 2. தானாகவே காணாமல் போய்விடுவார்.

நமக்கு பிடிக்குதோ இல்லையோ, மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை முதல்வர் என மரியாதை தருகிறோம். அதேபோல் ஓரளவு வாக்கு வாங்கும் அரசியல்கட்சிகளுக்கும் பொருளாதார உதவிகளை அளித்து  அரசு அங்கீகரிக்க வேண்டும். அரசியல்கட்சிகள் ஏன் தடம் மாறுகின்றன என யோசித்தபோது வந்த யோசனை இது.

அரசியல்வாதிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்பட ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இது போன்ற முதலீடுகளும் நாட்டுக்கு தேவை.

Wednesday, December 29, 2021

இங்கேயும், அங்கேயும்



சமீபத்தில் பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சீமானின் `எனக்கு ஒரு வீடு கூட இல்ல` என்ற தன்னடக்கத்தை நன்றாக கிழித்து ஒரு வீடியோ போட்டிருந்தார். சீமானின் மனைவி மற்றும் மாமியாரின் சொத்துக்களையும் அவர் வெளியிட, அதற்கு சீமான் பதிலளித்த, ஸாரி பல்லிளித்த கதையும் சூப்பர்.

ஆனால் எனக்கு எதையுமே எதார்த்தமாக பார்த்து பழகிவிட்டது. எல்லோரும் அவரை மோசடி பேர்வழி என முத்திரை குத்தினாலும் அவருடைய செயல்பாடுகள் மற்றும் உடல் மொழி அவரை அப்படி காட்டுவதாக எனக்கு தோணவில்லை. காரணம், மோசடி நபர்களிடம் கொஞ்சமாவது திறமை இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்வார்கள், அது வேறு விஷயம். ஆனால் எதிரி எப்போது ஏமாறுவான் என எதிர்பார்த்து சரியான நேரத்தில் சுருட்டுவார்கள். இந்த திறமை நிச்சயம் அவர்களிடம் இருக்கும். 

இங்கே இவருடைய அரசியல் பயணத்தை பார்த்தால் இவருக்கு அப்படி ஒரு தகுதி இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து சளைக்காமல் பிரச்சாரத்தில் இருக்கிறரர். 4 சதவிகித ஓட்டை இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காட்டிவிட்டார். அதுவும் கடந்த தேர்தலில் வெற்றிக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அதிமுக சற்று அதிகமாகவே இருந்தது.

இந்த சூழ்நிலையில் அவர் அந்த பலவீனத்தை பயன்படுத்தி அங்கேயோ அல்லது அதை காட்டி இங்கேயோ பேரம் பேசியிருக்கலாம். கொஞ்சம் வளைந்திருந்தால் இவரும் கோடிகளில் குளித்திருக்கலாம். இந்நேரம் ராமதாஸ் போல் எதாவது ஒரு பண்ணை வீட்டில் மரம் செடி நட்டு இயற்கையையும், அப்படியே தன்னையும், பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் நாம் அவரை குறை சொல்ல முடியாது.   

ஒருவகையில் இவர் ஒரு (உருப்படாத) கொள்கை உடைய அரசியல் தலைவர் என்றுதான் கணிக்க வேண்டும். இரண்டாம் புலிகேசி என்பதுபோல் இவர் அரசியலில் இரண்டாவது வைகோ.

குண்டு பல்ப்

இந்த செய்தியையும் கவனித்தேன். தமிழ்நாட்டில் எல்லா விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டர்பொருத்தும் பணி நடைபெறுகிறதாம். காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதுதான்.

நல்ல செய்திதான். ஆனால் இதிலும் ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சம்பவம். ஒரு வீட்டில் காலையில் தோட்டத்தில் இருந்த பாத்ரூமுக்கு போனால், அங்கே விடிய விடிய குண்டுபல்ப் எரிந்து கொண்டிருந்தது. `இரவு இதை நிறுத்தி விடலாமே?` என்று கேட்டதற்கு , `எல்லா பல்ப் எரிந்தாலும் எங்களுக்கு பில் குறைவாத்தான் வரும்` என்று பதில். காரணம் அப்போது ஏழைகளுக்கு 100- யூனிட் மின்சாரம் இலவசம் (என்று நினைக்கிறன்). எனவே அவர்களுக்கு பெரும்பாலும் குறைவாகத்தான் பில் வருமாம். இதுதான் இலவசத்தின் லட்சணம்.

ஒரு பக்கம் மின் பற்றாக்குறை இருக்க, இன்னொருபக்கம் இலவசம் என்ற காரணத்திற்காக இப்படி பல வகைகளில் விரயம். இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்போதுதான் கணக்கெடுக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். எவ்வளவு வேகமாக இந்தியாவில் குறைகளை கண்டுபிடித்து சரி செய்கிறார்கள் பாருங்கள்! நாடு விளங்கிடும்.

மாமியார் உடைத்தால் ...

இது தேசிய செய்தி. கர்நாடகா மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்திருக்கிறது. இதை விமர்சனம் செய்த காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், யாரும் கழுத்தில் கத்தி வைத்து மதம் மாற கட்டாயப்படுத்துவதில்லை. ஒருவரின் செயல், அவருடைய நன்னடத்தைத்தான் மற்றவர்களை அவர்களின் பாதையில் போக வைக்கிறது என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் என்பது வேறு அல்லவா. அதுவும் அரசியல் நிகழ்வுகளை அதிகம் கவனிக்கும் ஆசாத்துக்கு தெரியாதா பல மன மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது என்று.

காங்கிரசிலிருந்து எத்தனையோ பெருந்தலைகள் பிஜேபிக்கு தாவி இருக்கிறார்கள். அவர்கள் கழுத்தில் பிஜேபி கத்தியையா வைத்தது? பாதி பேருக்கு பதவி ஆசை, மீதி பேருக்கு அங்கே மரியாதை இல்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு. எனவே தாவிவிட்டார்கள்.

மத மாற்றங்களிலும் இதுதான் நடக்கிறது. இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான். இங்கே மற்ற மதத்தினரை பிஜேபி குறை சொல்கிறது. அதேசமயம் அதே கொள்கையைத்தான் பிஜேபி அரசியலில் கடைபிடிக்கிறது.

இங்கே நாம் யாரை குறை சொல்வது?

Sunday, June 13, 2021

இது இங்கே நடந்துவிட்டது



இந்த கோரோனா காலத்தில் சில வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அது நம் மனதில் பதிந்தும் விட்டது. ஆனால் அந்த வார்த்தைகள் அனைத்தும் வேறு ஒரு துறையில் பொருத்தி கவனித்தால் அது சில ஆச்சர்யமான செய்திகளை தருகிறது.

PEAK 

Peak, herd immunity, vaccine இவைதான் தற்போது நாம் கொரோனா காலத்தில் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகள். முதல் அலையில் கொரோனா 1 லட்சத்தை நெருங்கி இறங்கியது. இரண்டாவது அலையில் அது 4 லட்சத்தை தொட்டு விட்டு இறங்கியது.

ஆரம்பத்தில் இது எந்த அளவு போகும் என தெரியாமல் திணறினோம். அது 3க்கு கீழே போய் 2, 1 லட்சம் என இறங்கிய பிறகு, இனி இது இந்த அலையில் மட்டுமின்றி அடுத்த அலையிலும் இந்த அளவுக்கு ஏறாது என தெரிகிறது. இதே  தியரியை நாம் தமிழக அரசியலில் பொருத்தி பார்த்தால் அங்கேயும் ஒரு சுவாரசியமான செய்தி தெரிகிறது.

இங்கே ஊழல் நடக்கிறது, அது இனியும் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஊழலின் முதல் அலை அம்மா ஆட்சியில் டான்சி மற்றும் சில ஊழல்கள் என பரபரப்பாகி நம்மை திகைக்க வைத்தது.

வழக்கம் போல் மக்களின் / சட்டத்தின் அலட்சியம் காரணமாக கொஞ்சம் அடங்கிய அந்த அலை பின்னர் அய்யா ஆட்சியில் 2g ஊழல் என பிரமாண்டம் எடுத்தது. அது கொடுத்த அதிர்ச்சியும் விளைவுகளும் மிக கடுமையாக இருக்க, அந்த அலையும் அடங்கியது. அதன் பிறகு இமாலய ஊழல் அலை என எதுவும் காணோம். 

அந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் நாம் தமிழகத்தில் ஊழலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என தெரிகிறது. இனி அது இறங்குமுகமாகத்தான் இருக்கும். அதேசமயம் எல்லா தொற்று நோய்களும் ஆரம்பத்தில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அடங்கினாலும், அது அவ்வப்போது வரும் seasonal disease ஆக இருக்கும் என்பதும் எதார்த்தம். அந்த வகையில் இனி தமிழகத்தில் ஊழலும் அப்படித்தான் இருக்கும். இது தியரி. நாமும் நம்புவோம்.

Herd immunity

இதுதான் நடந்து முடிந்த தேர்தலில் நான் கவனித்த சுவாரசியமான, சந்தோஷபடவேண்டிய விஷயம்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக நமக்கு இருந்தது. தொற்று நோய் நம்மை தாக்கும்போது, ஓன்று தடுப்பூசி கண்டுபிடித்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, மருந்து இல்லாத நிலையில், நம் உடல் இயற்கையாகவே அந்த நோயை எதிர்த்து போராடும் சக்தியை பெற்றுவிடும். இதைத்தான் நாம் கொரோன விஷயத்தில் Herd immunity என அதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஓட்டுக்கு பணம் விஷயத்திலும் அப்படித்தானே நடக்கவேண்டும். அரசு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை தண்டிக்கவேண்டும். அப்படி நடந்தால் இது குறையும். ஆனால் கொடுப்பதே ஆட்சியாளர்கள் எனும்போது என்ன செய்வது? இதற்கு மருந்தே இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெர்ட் மெண்டாலிட்டி இங்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

ஒரு காலத்தில் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. இப்போது எல்லோரும் பணம் கொடுப்பதால், பணமும் கொடுக்கணும் கூடவே தகுதியும் இருக்கனும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதிகாரம் கையில், ஊழல் செய்த பணமும் நிறைய, அதில் மக்களுக்கு கொடுத்ததும் அதிகம் என்ற நிலையில் அதிமுக தோற்கிறது என்றால், இனி பணம் தமிழக மக்களை ஏமாற்றாது என தெளிவாக தெரிகிறது. அவர்கள் எல்லோரிடமும் வாங்கி கொண்டு அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டுவிடுகிறார்கள். இந்த சந்தை மனப்பான்மை `ஓட்டுக்கு நோட்டு` என்ற வியாதியையும் கட்டுப்படுத்திவிட்டது. இனி அரசியல்வாதிகள் பணம் கொடுக்க யோசிப்பார்கள். அந்த பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. எனவே இதுவும் சந்தோஷமான செய்திதான். 

தற்போதைய திமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுக்குமா என தெரியாது, ஆனால் நிச்சயம் நல்லாட்சியாக அதாவது மோசமான பேர் எடுக்கும் ஆட்சியாக இருக்காது என நம்பலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதற்கு பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. நானும் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லாமல் பதிவை முடிக்கமாட்டேன். அந்த வகையில் ஒரு சம்பவம்.

இங்கே அகமதாபாத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி. கோரோனோவுக்கு முந்தையது. இரவு சாப்பாடு ஆரம்பமானது. சாப்பிடும் வரிசையில் சில சிறுவர்கள். முகமே சொல்லும் தமிழர்கள் இல்லை என்பதை. அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்கள். அவர்களை கவனித்துவிட்ட `நம்மவர்` அவர்களை துரத்திவிட்டார்.

பின்னர் பந்தி முடிந்தது. சில உணவுகள் மீந்தது. இப்போது அந்த நம்மவர் சொல்கிறார், `எதையும் வீணாக்காதீங்க. பக்கத்துல ஏழைகளுக்கு கொடுத்திடுங்க` என்று. இது நல்ல செயல்தான். பல இடங்களில் கவனிக்கலாம். அதுவும் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர் சாப்பிட்ட பிறகுதான் நாம் சாப்பிடுவோம். எனவே இதை நான் இங்கே குறையாக குறிப்பிடவில்லை.

ஆனால்  மனிதர்களை நான் பல விதங்களில் கவனித்த வரையில், பசிக்கு சாப்பாடு போடும் மனிதர்களை விட தன் பசி அடங்கிய பின் சாப்பாடு போடும் மனிதர்களே இங்கே அதிகம். அந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் இங்கே எடுத்துக்கொள்வோம்.

நம்மவர் 

நான் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்துக்காக பதிவு எழுத ஆரம்பிப்பேன்  பின்னர் அது முழுமை பெறாமல் அப்படியே டிராப்டில் நின்று விடும். நம்மவர் கமல் ஒரு பேட்டியில் `மக்களுக்கு சேவை ` என பேசியதை கேட்டு கோபம் கொண்டு அவருக்காக எழுதிய பதிவில் இந்த உதாரணத்தை எழுதினேன். அதுதான் இங்கே.

கமல் அரசியலில் இறங்கியிருக்கிறார். சந்தோஷம். நடந்து முடிந்த தேர்தலில் சறுக்கியும் இருக்கிறார். அதுவும் சந்தோசம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நான் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று அவர் சொன்னால் அது பாதிதான் உண்மை.

நிஜத்தில் அவர் பணம், புகழ் மற்றும் பல என எல்லாமே திருப்தியாக பார்த்துவிட்டார். அவருடைய திரைப்பட வாழ்க்கை அந்திம காலத்தில் இருக்கிறது. எனவே இனி அவருக்கு தேவையில்லாத, பயன்படாத காலங்களை மக்களுக்காக ஒதுக்கி இருக்கிறார். சேவை எப்போது செய்தாலும் வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அவரின் இந்த செயல் சிறந்த முன்னுதாரணமாக சொல்லமுடியாது.

ஸ்டாலின்

கிட்டத்தட்ட ஸ்டாலின் கதையும் அப்படித்தான். அவர் இளமையிலேயே அரசியலுக்கு வந்துவிட்டது  நல்ல தொடக்கம் என்றாலும், இதற்கு  மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது.

ஒரு மளிகை கடைக்காரர் பையன் 15 வயதில் கடைக்கு வந்து வியாபாரம் செய்வதும், ஒரு விவசாயின் மகன் சிறு வயதிலேயே நிலத்தில் இறங்குவதும் இயற்கையான நிகழ்வு. அதேபோல் ஒரு அரசியல்வாதியின், அதுவும் முதல்வரின் பிள்ளை, அரசியலுக்கு வந்தார் என்றால் அதுவும் இயற்கைதான். ஆனால் தகுதி? அது கேள்விக்குறியாகவே இருந்தது.

எனக்கும் ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. இதற்கு முன் `1g vs 2g` என்ற பதிவில் முதல் தலைமுறை வெற்றியாளர்களான மோடி மற்றும் எடப்பாடி போன்றவர்களை வாரிசு தலைவர்கள் வெல்வது சிரமம் என்ற தொனியில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை மீறி இவர் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவும், சுற்றிலும் ஜால்ரா கூட்டமாகவும் இருப்பதால் அவர்களால் பல விஷயங்களை கவனிக்க முடிவதில்லை. அது அவர்களை எதேச்சாதிகாரிகளாக மாற்றிவிடுகிறது.

ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த நீண்டகால ஓய்வில் அது போன்ற சிக்கல்களை சந்திக்காமல், அவர் பல விஷயங்களை கவனித்திருக்கிறார்/படித்திருக்கிறார் என தெரிகிறது. அது அவருடைய தற்போதைய நிர்வாக முடிவிலும் தெரிகிறது.

`உன் நண்பன் யார் என சொல் நீ யார் என நான் கூறுகிறேன்` என வசனம் ஓன்று உண்டு. அந்த வகையில் இறையன்பு அவர்களை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் என தெரிகிறது.

அது மட்டுமின்றி மேலும் சில அமைச்சர்களின் பேச்சும் செயலும் தமிழகம் நல்லாட்சியை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது. இதுவும் நல்ல செய்தி. வரவேற்போம்.       
 

Friday, March 26, 2021

`சின்னப்புள்ள` சீமான்


எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.

ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.

ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?

சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.

இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.

இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.

இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.

இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.

காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.

ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.

நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.