!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, November 29, 2025

விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்


இப்போது இ-காமர்ஸ் பலவிதங்களில் உருவாகி பல துறைகளில் வெற்றி நடைபோடுகிறது. அரசியல் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியுமா. இங்கேயும் அது வந்துவிட்டது. அதில் ஒன்றுதான் தமிழக வெற்றிக் கழகம்.

அதாவது சிலர் ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செய்வார்கள், ஆனால் அதை சந்தைப்படுத்தும் உத்தி தெரியாது, அல்லது அந்த அளவுக்கு பலம் இருக்காது. இப்படிப்பட்ட நிறுவனங்கள் பலமாக இருக்கும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தும் உரிமையை கொடுத்துவிடுவார்கள்.

அந்த முறை கொஞ்சகாலம் வெற்றிகரமாக செயல்பட்டது. இப்போது அதுவும் பழசாகிவிட்டது. இணையம் வந்தபிறகு எல்லோரும் சொந்தமாக ஆன்லைன் கடை போட ஆரம்பித்தார்கள். அதற்கும் வழியில்லாதவர்கள் அமேசான் போன்ற நிறுவனங்கள் மூலம் சந்தைப்படுத்துகிறார்கள்.

Wednesday, November 26, 2025

தமிழக அரசு vs கவர்னர் ரவி - இது ஒரு கவுண்டமணி காமெடி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு vs கவர்னர் ரவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று இரண்டு நாளாக படித்தேன். வருவேன்..ஆனா வரமாட்டேன் என்ற வகை.  

இந்த வழக்கில் கவர்னர் மற்றும் குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது என்று இவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். நான் பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன், இந்த நீதிபதிகளுக்கும்  நீட் எக்ஸாம் வைத்து அவர்களுக்கு பொது அறிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று. அதை செய்யாததால்தான் இப்படிப்பட்ட அபத்தமான தீர்ப்புகள் வருகின்றன.

Friday, November 21, 2025

பீகாரில் தோற்கும் வாரிசு அரசியல் தமிழ்நாட்டில் ஜெயிப்பது எப்படி?



சில காரணங்களை சொல்லலாம். முதல் காரணம், ஸ்டாலின் அரியர்ஸ் வைத்தாவது அரசியல் பரிட்சையில் பாஸாகிவிட்டார் என்பதுதான்.

அதாவது முதல் தலைமுறை அரசியல் தலைவர்கள் அவர்களுடைய 40-50 வயதிலேயே அரசியலின் உச்ச பதவியையே அடைந்துவிடுகிறார்கள். ஆனால் வாரிசுகளுக்கு இது சிரமம். அப்பாக்கள் இடத்தை காலி பண்ணும் வரை இவர்களுக்கு வாய்ப்பும் வராது, அரசியலும் புரியாது, தலைகளே முடிவுகளை எடுக்துக்கொண்டிருப்பார்கள், பாடங்களையும் அவர்களே கற்றுக் கொண்டிருப்பார்கள்.

எனவே கலைஞரின் கடைசி 10 ஆண்டுகள் மட்டும் கட்சி இவருடைய கட்டுப்பாட்டில் வந்திருக்கலாம். அது இவருக்கு அபரண்டிஸ். அதன்பின் நிஜமான தலைவராகி சில ஆண்டுகள் சில முடிவுகள் அதில் பல பாடங்கள் என தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாக பாஸாகியிருக்கிறார்.

இதன் அர்த்தம் என்னவென்றால் வாரிசுகளும் அரசியலில் ஜெயிக்கலாம், கொஞ்சம் லேட்டாகும் என்பதுதான். அந்த அடிப்படையில் ராகுல் காந்தியும், தேஜேஸ்வர் யாதவும் இன்னும் 20-30 ஆண்டுகளில் ஒருவழியாக வெற்றியை பெறலாம். அதுவரை அவர்கள் கனவு காணட்டும்.

இரண்டாவது காரணம்.

இதை புரிந்துகொள்ள கிரிக்கெட்டைதான் துணைக்கு அழைக்கவேண்டும். இங்கே உலகக்போப்பை வேறு ஆசிய கோப்பை வேறு. உலககோப்பையையில் ஜெயிப்பதற்கு நிச்சயம் திறமை வேண்டும். அங்கே ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா மற்றும் அந்த நேரத்து திறமையான அணிகள் என பலர் போட்டியில் இருப்பார்கள். ஆசிய கோப்பையில் அந்த தலைவலி இல்லை. இங்கே ஏதோ ஒரு அணிதான் கடுமையாக இருக்கும். எனவே இந்தியாவுக்கு இங்கே வெற்றி சுலபம்.

ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் ஆசிய கோப்பை மாதிரி. இந்திய அரசியலில் தமிழகம் எப்போதும் எல்லாவிதத்திலும் வித்தியாசமாக இருப்பதால் பிஜேபியின் அரசியல் இங்கே பலிப்பதில்லை. அவர்களும் தமிழ்நாட்டு மக்களிடம் பிளட், யூரின், சுகர் டெஸ்ட் என எல்லாம் எடுத்து பார்த்துவிட்டார்கள். இன்னமும் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அடுத்து டி என் எ டெஸ்ட் எடுப்பார்கள் போலிருக்கிறது. கடைசிவரை அவர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வரும் தேர்தலிலாவது அவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்கிறதா என பார்க்கவேண்டும்.

ஆக பிஜேபி இங்கே களத்திலேயே இல்லை. ராகுல் -தேஜேஸ்வர் போன்ற `அனுபவமுள்ள` தலைவர்கள் நாமினேஷன் முடியும்வரை கூட்டணி உண்டா இல்லையா என்று அங்கே பீகாரில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டிலும் எல்லோருக்கும் முதல்வர் கனவு இருக்கிறது. எனவே அதே நிலைதான் இங்கேயும். ஒருவேளை கடைசிகட்ட கூட்டணி இவர்களுக்கு ஏற்பட்டால் அது கை கொடுக்குமா அல்லது காலை வாருமா என்பது இனிமேல்தான் தெரியும். எனவே இந்த சண்டை திமுகவிற்கு சாதகமாக போகலாம்.

கடைசி காரணம்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஜெயிப்பதற்கு முக்கியமான காரணம் என நான் கருதுவது இதுதான். இங்கே இவர்கள் அரசியலில் MLM முறையை கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இன்றைய வியாபாரம் வாடிக்கையாளர் திருப்தி என்ற நிலையிலிருந்து விற்பனையாளர் சந்தோசம் என்று வந்துவிட்டது. இதை திராவிட வியாபாரிகள் விரைவாக உணர்ந்து, அதை அரசியலுக்கும் கொண்டுவந்துவிட்டார்கள்.

MLM என்றால் பலருக்கு தெரியும். புரியாதவர்களுக்கு இதன் விரிவாக்கம், மல்டி லெவல் மொள்ளமாரித்தனம் என்பதுதான். அதாவது இங்கே அரசியல் தலைவர் தனக்கு கீழே 10-20 அமைச்சர்கள் என ஒரு லெக் போட்டுவிடுவார். இவர்கள் தலைவருக்கு கப்பம் கட்டவேண்டும்.

அந்த அமைச்சர் தனக்கு கீழே 5-10 எம் எல் ஏக்களை போட்டுக்கொள்வார். நீ முடிந்ததை சுருட்டு என் அவருக்கு அனுமதி அளிப்பார். அல்லது அவர் தன்னுடைய ஆதரவாளராக இருந்தால்தான் தனக்கு மந்திரி பதவி என்பதால் அவருக்கும் இவர் சுருட்டுவதில் பங்கு கொடுப்பார். இது மாவட்ட செயலாளர் மற்றும் பிற தலைவர்கள் என போகும்.

அவர்களும் அவர்களுக்கு கீழே வட்ட செயலாளர் வண்டு முருகன் என பல மட்டங்களில் லெக் போடுவார்கள். ஆக மொத்தத்தில் ஊழலில் ஒரு பிரமிட் சிஸ்டத்தை கொண்டுவந்து எல்லாமட்டத்திலும் ஊழல் என மாற்றிவிட்டார்கள்.

எனவே கடைநிலை கட்சிக்காரர்கள் வரை இங்கே சம்பாதிக்கிறார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம், இவை ஊழல் என்பதால் வழக்கை சந்திக்க வேண்டும் என்ற பயம், இந்த நிலையை தவிர்ப்பதற்கு அவர்கள் சார்ந்த கட்சி அதிகாரத்தில் இருந்தாகவேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக அவர்கள் ஓடுகிறார்கள். தலைவர் தலைவராக இருக்கிறாரா அல்லது தத்தியாக இருக்கிறாரா என்பதுபற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஓடுகிறாரார்கள்.

சுருக்கமாக சொன்னால் திருப்பதியில் பெருமாளை தரிசிப்பது போலத்தான் இது. அங்கே நீங்கள் வரிசையில் நின்றால் போதும், பின்னால் இருப்பவன் அவனுக்கு பின்னால் இருப்பவன் என எல்லோரும் நம்மை தள்ளியே பெருமாளிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள்.

அதுபோல் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், கட்சிக்காரர்கள் என எல்லோரையும் இந்த திராவிட கட்சிகள் பணக்காரர்களாக மாற்றிவிட்டதால், அவர்கள் தேவைக்காக ஓடுகிறார்கள், தள்ளுகிறார்கள். அந்த இயற்கையின் நியதியில் இங்கே திராவிட தலைவர்கள் ஜெயிக்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் திறமையின் அடையாளமாக காட்டிக் கொள்கிறார்கள். மொத்தத்தில் தங்களுக்கு வசதியான ஒரு அயோக்கியத்தனமான நடைமுறையை இந்த தலைவர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

இதைத்தான் இன்றைய வியாபார முறை செய்கிறது. ஒருகாலத்தில் ஒரு பொருளை விற்க நுகர்வோரை திருப்திப்படுத்தவேண்டியிருந்தது. இப்போது வியாபாரிகளுக்கு அதிக கமிஷன் கொடுத்தால் போதும் அவர்கள் `இதுபோன்ற சரக்கு உங்களுக்கு எங்கேயும் கிடைக்காது` என்று சொல்லி அந்த பொருளை வெற்றிகரமாக சந்தைப்படுத்திவிடுவார்கள்.

இப்போதெல்லாம் மருந்து பொருட்களில் எம் ஆர் பி க்கும் விற்கும் விலைக்கு சம்பந்தமே இருக்காது. இது அந்த மார்க்கெட் உத்தியின் வெளிப்பாடுதான்.

இந்த அயோக்கியத்தனத்தை முதலில் கலைஞர்தான் ஆரம்பித்து வைத்தார். இவரை தூக்கிப்பிடித்த வியாபாரிகளை, அதாவது அமைச்சர்களை நிறைய சம்பாதிக்க (வருவாய் பகிர்வு முறையில்தான்) அனுமதித்தார். அடடா இவர் நமக்கு நிறைய சம்பாதிக்க வாய்ப்பு தர்றாரே என அவர்கள் இவரை போல் ஒரு தலைவர் உண்டா என புகழ்பாட ஆரமபித்தார்கள். அந்த நடைமுறையை அதன்பின் வந்த எல்லா திராவிட தலைவர்களும் தொடர்கிறார்கள்.

ஆனால் இயற்கை பல வியாதிகளை அவ்வப்போது கொடுக்கும், அதேநேரம் கூடவே விரைவில் அதற்கான மருந்தையும் கொடுக்கும். காத்திருப்போம்.

Monday, November 17, 2025

நியாயமற்ற செயல் ! (தேர்தல் கமிஷன்)


தினமலர் 13-03-2009 இதழில் வெளியான கடிதம்.

(தேர்தல் கமிஷனை இப்போது எல்லோரும் கிழித்து தொங்கவிடுகிறார்கள். இது 15 வருடங்களுக்கு முன் நான் தினமலருக்கு அனுப்பி பிரசுரமான கடிதம். இப்போதைய சூழ்நிலையில் படித்தால் காலம் மாறவில்லை என்பதும் புரிகிறது, காங்கிரசின் யோக்கியதையும் தெரிகிறது.)

`தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்` என்ற தலைமை தேர்தல் கமிஷனரின் பரிந்துரையை, மத்திய அரசின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி நிராகரித்ததோடு மட்டுமில்லாமல், அடுத்த தேர்தல் கமிஷனராக அவரை அறிவித்தும் இருக்கிறார்.

Sunday, November 16, 2025

பீஹார் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி


பீஹார் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? வாரிசு அரசியல் எடுபடாது என்பதுதான். அப்படியென்றால் தமிழ்நாடு ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது என்று பார்த்தால், அதற்கு வேறு ஒரு தியரி தெரிகிறது.

எனக்கு இந்த ஓட்டு திருட்டு, EVM மோசடி போன்ற விஷயங்களில் உடன்பாடில்லை. இது தோற்றுப்போனவர்களின் புலம்பல். ஆனால் முறை தவறிய அரசியலை பிஜேபி செய்கிறது என்பது மட்டும் புரிகிறது. SIR தேவைதான். ஆனால் காலஅவகாசம் கொடுத்து இன்னும் எளிமையாக செய்திருக்கவேண்டும். அங்கே அவர்கள் அவசரம் காட்டியிருக்கிறார்கள்.

Saturday, November 8, 2025

கோவை கற்பழிப்பு - என்னதான் செய்வது?


கோவை கற்பழிப்பு இன்னும் ஒரு வாரம் ஓடும். அடுத்த பரபரப்பு செய்திக்காக வெயிட்டிங். இங்கே நீண்ட காலமாக இது போன்ற செய்திகளை கவனிக்கிறோம். ஆனால் இதுவரை தீர்வுதான் வரவில்லை. எனவே நாம் மாற்றி யோசிக்கவேண்டியதுதான்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சில அடிப்படையான பிரச்சினைகள் என சில வகைப்படுத்தி அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

முதல் பிரச்சினை காலதாமதம். அந்தக்காலத்தில் பெண்கள் 14-15 வயதிலேயே `உலகத்தை` பார்த்தார்கள். பின்னர் அது 18-20 என மாறியது. இப்போது பெண்கள் முதுநிலை கல்வியையும் முடித்து பின்னர் வேலைக்கு போய் அங்கே இரண்டு வருடம் பணம் சம்பாதித்து, பெற்றவர்களுக்கு கொஞ்சம் உதவியாய் இருந்து அதன்பிறகு 25-30 க்கு பிறகுதான் திருமணம் செய்து `உலகத்தை` பார்க்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இது பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்படும் அநீதி.

Tuesday, November 4, 2025

மோடி கோவிலுக்கு போவதும், அமெரிக்காவின் மதச்சார்பின்மையும்


முகநூலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். சமீபத்தில்தான் கவனித்தேன். அதாவது மோடி அடிக்கடி கோவிலுக்கு போகிறாராம். அதை தொலைக்காட்சிகள் அடிக்கடி காட்டுகிறார்களாம். இதை வைத்து ஒரு மேதாவி எழுதிய கருத்தை, இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் இன்னொரு மேதாவி அவருடைய முகநூலில் பகிர்ந்திருந்தார். வழக்கம்போல் ஜேம்ஸ் வசந்தனின் அடிவருடிகள், அதாவது சிறுபான்மை சிந்தனையாளர்கள், வந்து அவர்களுடைய கருத்துக்களையும் வாந்தி எடுத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் அதிபர் சர்ச்சுக்கு போவதை காட்டமாட்டார்களாம், இஸ்லாமிய நாடுகளில் மன்னர்கள்/ஷேக்குகள்/ மசூதிக்கு போவதை காட்டமாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் சமதர்ம கொள்கையை கடைபிடிப்பவர்களாம். இதுதான் அந்த பதிவின் முக்கிய கருத்து. ஆனால் இந்தியாவில் மதவாதம் எப்படி இருக்கிறது பாருங்கள் என எல்லோரும் கோரஸாக வருத்தப்பட்டிருந்தார்கள்.

Saturday, September 6, 2025

(இரண்டு கால்) நாய்கள் ஜாக்கிரதை



இதுதான் தற்போதைய பரபரப்பு. நானும் இரண்டு தரப்பு வாதங்களையும் கவனித்தேன். நான் நேரடியாக கவனித்த சில அனுபவங்களும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றையெல்லாம் இங்கே பார்ப்போம்.

இரக்கம் தேவைதான். ஆனால் அது யாரிடம் கட்டவேண்டும், எப்படி காட்டவேண்டும் என்பதில்தான் இங்கே சிக்கல் வருகிறது. இந்த நாய் ஆதரவாளர்கள் தங்கள் வருமானத்தை முதலில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்துவிட்டு அது போக மீதம் இருக்கும் தொகையைத்தான் இது போன்ற நாய் வளர்ப்பு அல்லது தெரு நாய்களுக்கு உணவளித்தல் என்ற புண்ணியத்தை செய்கிறார்கள்.

Monday, August 11, 2025

டிரம்பின் அட்ராசிட்டி


வர வர கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. நான் டிரம்ப் செய்யும் அட்ராசிட்டியைத்தான் சொல்கிறேன். நான் வேறு ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருக்கிறேன். காலையில் டீ சாப்பிடுகிறேனோ இல்லையோ, இன்னைக்கி இந்த ஆள் என்ன சொல்லியிருக்கார் என்று தெரிந்துகொண்டுதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் போலிருக்கிறது.

உக்ரைன் -ரஷ்யா சண்டை முடிவுக்கு வராமல் இழுத்தபோது, ஏதோ ஒரு இடத்தில் ஜெலன்ஸ்கியோ அல்லது யாரோ சொன்னார்கள். இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடாக இருப்பதால், அதிலும் மோடி-புதின் உறவும் நல்ல நிலைமையில் இருப்பதால், மோடி இருதரப்பிடமும் பேசி ஏதாவது ஒரு ஒப்பந்தத்துக்கு அவர்களை சம்மதித்திருக்க வேண்டும் என்று.

Monday, August 4, 2025

ஆணவக்கொலை - ஏன், எதனால், என்ன செய்யவேண்டும்?



இது போன்ற செய்திகளை அதிகம் படித்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கொஞ்சம் அதிகமாகவே சுற்றும். காரணம், நான் கொஞ்சம் எதார்த்தவாதி. இப்போதிருக்கும் பரபரப்பு பரதேசிகளான பத்திரிகையாளர்களை போல் இவர்தான் குற்றவாளி என்றும், இதுதான் நடந்தது என்றும் உடனடியாக நான் முடிவெடுத்துவிடுவதில்லை.

தற்போது யூடுப் பத்திரிகையாளர்கள் எனும் புது பரதேசிகள் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 10 மணிக்கு ஒரு சம்பவம் நடந்தால் 12 மணிக்கு உடனடியாக அதை பற்றி விவாதித்து, கருத்து எனும் பல வாந்திகளை எடுத்து நம்மை குழப்பி விடுவார்கள். உண்மை என்னவென்று கொஞ்சம் தாமதமாக வெளிவரும்போது, அதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவர்கள் வேறு ஒன்றில் வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

Monday, May 19, 2025

துருக்கிக்கு ஏன் இந்த வேலை?



இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.

துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

Tuesday, May 13, 2025

இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?


இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.

எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.

Sunday, May 4, 2025

காஷ்மீர் மாறி வருகிறதா


சமீபகாலமாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இது குறித்து நிறைய கவனிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிகிறது. அதில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி, காஷ்மீரும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் தன்னிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தவை. ஆனாலும் இந்த மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையவை. இவற்றில் ஒரு தியரி வேலை செய்யவில்லை என்றால் மற்ற இரண்டு தியரியும் எந்த பயனும் தராது.

முதல் மாற்றம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது மோடி செய்த மிகபெரிய நல்ல செய்தி. அங்கே மக்கள் சுதந்திர மற்றும் தீவிரவாத மனநிலையில் இருந்தார்கள். வளர்ச்சி வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு வேண்டும். அரசும் பொதுத்துறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது. அது முட்டாள்தனமும் கூட. எல்லை பகுதி மற்றும் சண்டைகள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் தனியார் வருவதும் சிரமம். காஷ்மீர்களிடமும் பணம் இல்லை. இது ஒரு சிக்கலான நிலை.

Wednesday, April 23, 2025

இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை


தற்போது இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை எழுத நினைத்து நினைத்து நின்றுவிட்டது. இந்த முறை அதையும் பார்த்துவிடுவோம்.

அதாவது பெரும்பாலும் மனிதர்கள் வெளுத்ததெல்லாம் சுண்ணாம்பு என நினைக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் நிதானமாக கவனித்தால் இங்கே நியாயம் இளையராஜா பக்கம் இருப்பது தெரியும்.

இங்கே வெளிப்படையாக தெரிவது இளையராஜா பக்கம் நியாயம் இல்லை என்பது. அதாவது அவர் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை பெறவில்லையாம், எனவே அவருக்கு இப்படி பணம் கேட்க உரிமையில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் வாதம். ஆனால் இதைத்தாண்டி மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதல்லவா?  சட்டம் சில விஷயங்களை வலியுறுத்தினாலும் பல விஷயங்களில் சட்டமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விட்ட சம்பவங்களும் உண்டு. இது அந்த மாதிரியான வகை.

Thursday, April 17, 2025

தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் வளரமுடியவில்லை?


வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.

இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.

Wednesday, March 19, 2025

அமைச்சர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஏன் இந்தி படிக்கிறார்கள்?


கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.

இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.

இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.

Tuesday, March 11, 2025

மோடிஜி, இதுதான் சரியான நேரம்

மும்மொழி கொள்கைக்கு பிறகு டிலிமிடேஷன் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியிருக்கிறது. இதன் முக்கியமான தலைவலி வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக பெருகியிருப்பதுதான். மேம்போக்காக பார்த்தால் வட மாநிலத்தவர்கள் முட்டாள்களாக தெரியும். ஆனால் நிஜம்? 

இங்கே வெளிப்படையாக  தெரியும் காரணம் வறுமை. இன்றைய சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் நாளையை பற்றி யோசிக்கமாட்டான். தென் மாநிலங்களில் கடற்கரை இருப்பதால் இந்த மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி வந்தாலே அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நம்மை தள்ளிவிட்டுவிடும். எனவே நாம்  இங்கே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்; அவர்கள் துரதிருஷ்டசாலிகள். அவ்வளவுதான்.

Monday, March 3, 2025

WE WILL LEARN HINDI ONLY IF WE NEED !

வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.

இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?

இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?   

Saturday, March 1, 2025

இங்கே எல்லோரும் அமித்ஷாதான்



இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.

சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது.

Saturday, February 22, 2025

மோடிக்கு நேரம் சரியில்லை



மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.

இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.

Thursday, February 13, 2025

பெரியாரும், மணியம்மையும், இந்து மதமும்


பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான். 

தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.

Sunday, February 2, 2025

சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்

 

சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய்  என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.

கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.

Tuesday, January 28, 2025

பெரியார் எனும் மாபெரும் தலைவன்


இந்த மாதம் சீமானின் பெரியார் புராணம்தான் பரபரப்பாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்தை கவனித்து என்னுடைய பார்வையில் கருத்து சொல்லவேண்டுமென்றால், இங்கே பெரியார் தமிழ்நாட்டில் ஹீரோ நம்பர் 1 என்றால் அதே தமிழ்நாட்டில் கழிசடை நம்பர் 1 என்றால் அது சீமான்தான். இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி என்று கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அனால் அது பல பக்கத்துக்கு போக்கும் என்பதால் முடிந்த வரை சில விஷயங்கள் இங்கே.

அம்மாவின்/மனைவியின் அருமை அவர்கள் போனபிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் பெரியாரின் அருமையை அவர் போனபின்தான் தமிழக மக்கள் அறுவடை செய்கிறார்கள்/உணர்கிறார்கள். இதில் நான் சற்று கூடுதலாகவே உணர்கிறேன். காரணம் நான் அகமதாபாத்தில் இருப்பதால். அகமதாபாத் என்றில்லை நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துக்கு சென்று அங்கே சில காலம் வாழ்ந்தால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியும் மற்ற பல விஷயங்களில் தமிழகம் பெற்றிருக்கும் முன்னேற்றமும் உங்களுக்கு புரியும். அதுவும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உங்களுக்கு இருந்து பல விஷ்யங்களை ஒப்பிட்டு பார்க்கும் பகுத்தறிவும் இருந்தால்.

Thursday, January 23, 2025

ஒரு நல்லவரும் ஒரு கெட்டவனும்


முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.

ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.

Tuesday, January 14, 2025

சவுக்கு சங்கரும், ஞானசேகரனும்

என்னய்யா தலைப்பு இது என்று கேள்வி கேட்காதீர்கள். இங்கே இந்த இரண்டு பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் அல்லது காவல்துறை அவர்களை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் இந்த தலைப்பு.

முதலில் சவுக்கு சங்கர். இவர் கடந்த வருடம் ஐபிஸ் அருண் அவர்களை பற்றி, அவர் பெண் காவலர்களை தவறாக பயன்படுத்துகிறார் என ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அந்த வீடியோ எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீது வழக்கு தேவை என்பதை நானும் உணர்ந்தேன். அவர்மீது உடனடியாக வழக்கும்  பதியப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் போடப்பட்ட விதம் அயோக்கியத்தனம் என்ற அளவுக்கு இருந்தது.

Saturday, January 4, 2025

யார் அந்த நீதிபதி?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை செய்திதான் தற்போது பரபரப்பு. நானும் கவனிக்கிறேன். தொடர்ந்து நாட்டு நடப்பு செய்திகளை கவனிப்பவர்களுக்கு இது ஒரு பழகிப்போன செய்தி. இது இந்த வருடம். அடுத்த வருடம் இதே போல் ஒரு பரபரப்பு பாலியல் வன்கொடுமை வரப்போகிறது. காரணம், இங்கே பல விஷயங்களை பேசுவதற்கு/விவாதிப்பதற்கு/குரல் கொடுப்பதற்குதான்  மனிதர்கள் இருக்கிறார்களே தவிர, இதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்கள்தான் இல்லை.