சிலரிடம் பேசும்போது `அது போன வருஷம், 8ம் தேதி என்று நினைக்கிறேன், அன்னைக்கி செவ்வாய்கிழமை...` என்று துல்லியமாக பேசுவார்கள். விட்டால், நான் அன்று என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஞாபக சக்தி அவர்களிடம் இருக்கும் .
நான் அப்படி இல்லை. `நேற்று என்ன சாப்பாடு` என்று கேட்டால் கூட முழிப்பேன். அப்படி நினைவுகளில் சிக்கல். இருந்தாலும் சில விஷயங்களை நம்மால் மறக்க முடியாது; மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட சில நினைவுகள் இங்கே.
வாழை இலை
கடலூரில் இருந்தபோது, தனியாக ஒரு பேச்சிலர் ரூமில் தங்கி இருந்தேன். தினம் ஓட்டல் சாப்பாடுதான். இங்கே எனக்கு இரண்டு விதங்களில் நஷ்டம் மற்றும் கஷ்டம். ஓன்று, ஓட்டல் சாப்பாடு சில நாள்தான் ருசியாக இருக்கும். அதன்பின் அதுவும் சலித்துப்போகும். இரண்டு, இங்கே செலவும் அதிகம். மாதம் ஒரு நபர் ஓட்டலில் சாப்பாடும் செலவில் ஒரு சராசரி குடும்பமே, வீட்டு வாடகை கொடுத்தும், ஓட்டலாம்.
எனவே என்னால் ருசியாக சாப்பிடவும் முடியவில்லை, பணத்தை சேர்ப்பதும் சிரமமாக இருந்தது. அப்படியும் ஓரளவு வருமானம் இருந்ததால் தப்பித்தேன். பல ஓட்டல்களில் மாறி மாறி சாப்பிட்டாலும் ஒரு கட்டத்தில் நாக்கு வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கும். சில சமயம் இந்த டிபரஷனில் இரவு உண்ணாவிரதம் இருந்து விடுவேன். அது இரவு நேரங்களில் நம்மை தூங்கவிடாது.
நான் 20 களின் ஆரம்பத்தில் இருந்த நேரம் அது. வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்த போது நன்கு தெரிந்த ஒருவர் வாடிக்கையாளராகவும் இருந்தார். தெரிந்தவர் என்றால், `நீ குழந்தையாய் இருக்கும்போது` என்று சொல்லும் அளவுக்கு என்னை பற்றி தெரிந்தவர்.
ஒரு நாள் அவர் கடைக்கு வந்தபோது, `என்ன சாப்பிட போகலையா?` என கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதை கேட்டதும் அவர் முகம் மாறிவிட்டது. `நாளைலேந்து மதியம் ஒரு வேளை நம்ம வீட்டுல சாப்பிடு` என்று சொல்லிவிட்டார்.
வீட்டு சாப்பாடு என்ற உடன் எனக்கும் சந்தோசம். மறுநாள் போனேன். குடிசை வீடுதான். குனிந்துதான் வீட்டுக்குள்ளே நுழைய வேண்டும். அன்று நான் வாழை இலையில் பொரியல் அப்பளம் என நல்ல சாப்பாட்டை சாப்பிட்டேன்.
இந்த விருந்து ஒரு வாரம் தொடர்ந்தது. எளிய மனிதர்கள் இருப்பதை வைத்து சுமாராக வாழ்கையை ஓட்டுவார்கள். எனவே எனக்கு இப்படி சாப்பாடு போடுவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதே சமயம் விருந்தாளிகளுக்கு முன்னால் நாங்கள் இப்படித்தான் சாப்பிடுவோம் என சொல்லவும் முடியாது. எனவே அந்த சேவை ஒரு வாரத்தில் நின்றுபோனது.
ஒரு வாரம் சாப்பிட்டாலும் அந்த சாப்பாடு என் மனதில் மறக்கமுடியாமல் நின்றுவிட்டது. குறைந்தபட்சம் ஒரு நபரின் மனக்குறையை உணர்ந்து அதை தீர்க்க அவர் முயற்சித்திருக்கிறார்.
மீன்
இது நடந்து பல வருடம் இருக்கும். வாழ்க்கையும் அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. நானும் சந்து பொந்தெல்லாம் நல்ல சுவையான ஓட்டல், குறைந்த கட்டணம் என தேடிக்கொண்டிருந்தேன். இப்படி தேடியபோது ஒரு சுமாரான ஓட்டல் கொஞ்சம் ஒதுக்குபுறமாக கிடைத்தது.
அசைவ ஓட்டல் அது. குடும்பமே ஓட்டலை கவனித்து கொண்டிருந்தார்கள். பரிமாறியவரும் பெண்தான். அவருக்கு என்னைவிட 10 வயது அதிகமாக இருந்திருக்கும். சில நாள் சாப்பிட்ட பிறகு அந்த பெண்மணி ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன். அதன்பின் அவர் எனக்கு சாப்பாடு பரிமாறும் முறை மாறிவிட்டது.
வழக்கமாக இது போன்ற ஓட்டல்களில் மீன் குழம்பு ஊற்றினாலும் அதில் பேருக்கு சில மீன் சதைகள் இருக்கும். ஆனால் எனக்கு ஒரு முழு மீனே குழம்பில் வந்து விழுந்தது. அதேபோல் எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டாலும் அதுவும் கொஞ்சமாகத்தான் தருவார்கள். எனக்கு அந்த பெண்மணி இதிலும் நிறையவே வைத்தார்.
சில நாட்கள் இப்படி ஓடும்போது நான் ஒன்றை கவனித்தேன். இந்த சலுகை எனக்கு மட்டும்தான், மற்றவர்களுக்கு இப்படி அவர் சாப்பாடு போடவில்லை. அவர் ஏன் என்னை மட்டும் இப்படி கவனிக்க வேண்டும்?
அந்த சமயம் நான் நல்ல புத்தகங்களையும் படித்தேன், கெட்ட புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேதான் விதவிதமான கதைகள் இருக்குமே. அவையெல்லாம் என் மனதில் ஓடியது. அந்த பெண்ணுக்கு ஸாரி பெண்மணிக்கு என்னை பிடித்துவிட்டது, எனவே என்னை ஸ்பெஷலாக கவனிக்கிறார் என நினைத்தேன்.
அதே சமயம் ஷேர் மார்க்கெட், அரசியல் என என் சிந்தனை அதன் தலைவலிகள் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்ததால், நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை. அவரும் அதை பொருட்படுத்தாமல் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டிருந்தார்.
இப்படி இது தொடர, ஒரு சமயம், அடிக்கடி நான்வெஜ் சாப்பிட்டால் உடம்புக்கு சரிவருமோ இல்லையோ, நம்ம பட்ஜெட்டுக்கு ஆகாது என ஒரு முறை வறுத்த மீன் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த பெண் காரணம் கேட்க, `பட்ஜெட் இடிக்குது` என்று உண்மையையும் சொல்லிவிட்டேன்.
`சரி, இந்த மீனுக்கு காசு வேண்டாம்` என ஒரு வறுத்த மீனையும் வைத்துவிட்டார். இருந்தாலும் அது நாகரீகம் இல்லை என்பதால், அவர் மறுத்தாலும், நான் அதற்கும் காசு கொடுத்தேன்.
வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களை சந்தித்தாலும் இது எனக்கு புதிதாக இருந்தது. அவருக்கு என் மீது ஈர்ப்பு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
குழப்பமான மனநிலையில் சில வாரம் நான் அந்த ஓட்டலுக்கு போகவில்லை. அதன்பின் மீண்டும் ஒரு முறை போனபோது, `என்ன ஆளையே காணோம்?` என்றார். நான் சமாளிப்பதற்காக, `அடிக்கடி இதே குழம்பு சாப்பிடுவதால், கொஞ்சம் டேஸ்ட் மாத்தி சாப்பிட்டேன்` என்றேன்.
அவரும் `ஆமாம்பா, கொஞ்சம் மாத்தி மாத்தி சாப்பிட்டாதான் சாப்பாடும் எறங்கும் என்றவர், உனக்கு பிடிச்சது ஏதாவது இருந்தா சொல்லு செஞ்சுதர்றேன்` என்றார்.
இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓட்டலில் இப்படியெல்லாம் யார் கேட்பார்கள்? ஆனால் அதன்பிறகு அவர் ஒன்றை சொன்னார். `அன்னைக்கி நீ பேசும்போதே கவனிச்சேன், உனக்கு அம்மா சின்ன வயசுலயே போய்ட்டாங்கன்னு. எங்கம்மாவும் சின்ன வயசிலேயே போய்ட்டாங்க. அடுத்தவங்க வீட்டுல போட்டதை சாப்பிட்டு வளர்ந்தவதான் நானும். அங்கல்லாம் நமக்கு இது வேணும்,அது வேணும்னு கேட்கமுடியாது.
இவரை கல்யாணம் பண்ண பிறகுதான் நான் எனக்கு புடிச்சதெல்லாம் செஞ்சி சாப்பிட்டேன்` என்றவர், `உனக்கும் ஏதாவது வேணும்னா கூச்சப்படாம கேளு செஞ்சித்தர்றேன்` என்று சொல்லி அவர் அங்கே எனக்கு அம்மாவாக உயர்ந்து நிற்க, நான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
அதன்பிறகு எனக்கு அங்கே போக மனமில்லை. அதேசமயம் வேறு ஒரு தலைவலி வந்து, எனது ஓட்டல் சாப்பாடும் முடிவுக்கு வந்தது. அது மீளமுடியாத இன்னொரு சிக்கலில் என்னை மாட்டிவிட்டது.
டீ
சிறையிலிருந்து விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் இருக்கும். மறுபடியும் ஷேர் மார்க்கெட் கனவு வந்தது. சிலர், வீடு மாறினால் அந்த வாஸ்து நமது வாழ்க்கையை மற்றும் என நினைப்பார்கள். அதுபோல் நானும் ஊரையும் மாற்றி ஷேர் புரோக்கரையும் மாற்றி பார்ப்போம் என்ற முடிவில் அகமதாபாத் கிளம்பினேன்.
டிரைனில் பயணிக்கும்போது ஒரு முறை நான் கதவருகில் நின்று கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வெளி உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பர்கள் குழு அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் வயதான நபரும் அடக்கம்.
அவர்கள் ஏதோ ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்க, எனக்கு இந்தி தெரிந்தாலும், நான் மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஜாலி மூவ்மெண்ட்டில் அந்த வயதான நபர் என்னிடம் ஏதோ கேட்க, நானும் எதையோ சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு அவர் என்னிடம் நிறைய பேச ஆரம்பித்தார். அந்த நண்பர்கள் கலைந்து போன பிறகும் நிறைய பேசினார். பேசினார் என்பதைவிட நிறைய கேள்வி கேட்டார். தமிழக அரசியல், தேசிய அரசியல் என அது ஓடியது. என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என சகலமும் அதில் இருந்தது.
நான் தெரிந்த நபர்களிடம் கூட அதிகம் பேசமாட்டேன். இவர் அறிமுகமில்லாத என்னிடம் ரொம்ப நேரம் பேசினார். எனக்கு எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் நாகரீகம் கருதி நானும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அந்த நேரம் அங்கே டீ வர, இரண்டு டீ வாங்கி என்னிடம் ஒன்றை கொடுத்தார். நான் மறுத்தேன். அதேசமயம் சற்று முன் தன் நண்பர்களுடன் அவர் டீ குடித்ததையும் கவனித்தேன்.
`அபிதோ ஆப்னே பியா?` என நான் கேள்வி கேட்க, `இந்த டிரைனிலிருந்து கீழே குதித்தாலும் நான் டீ சாப்பிட்டுவிட்டுத்தான் குதிப்பேன்` என்றார். இந்த பதிலை அவர் சொல்லும்போது அவர் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் எனக்கு புரிந்தது. மௌனமாக இருக்கிறேன், கதவருகே நீண்ட நேரமாக இருக்கிறேன் என்பதால் அவர் அப்படி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். இப்போது நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். `என் முகமே அப்படித்தான்` என்று நான் சொன்னேன்.
இது எனக்கு புதிதல்ல. பலமுறை நான் எடுக்கும் முடிவுகளை பார்த்து, மற்றவர்களின் `இதை நான் எதிர்பார்க்கலியே` என்ற மாதிரியான கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது என்னுடைய மனநிலையை என்னை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கிறார்கள்.
அதன்பிறகு ரிலாக்ஸாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் மனிதர் நம்பவில்லை. அவர் வேறு பெட்டியை சேர்ந்தவர். `இன்னைக்கி நான் டீ வாங்கிக்கொடுத்தேன். நாளை நான் கண்டிப்பாக வருவேன், நீங்கள் வாங்கித் தாருங்கள்.` என கண்டிஷன் போட்டார். அதாவது எனக்கு செக் வைக்கிறாராம்.
மறுநாளும் வந்தது. அகமதாபாத் 4 மணிக்கு மேல் வரும் என்பதால் நானும் 3 மணிவரை எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. அப்போதும் டீ வந்தது. எனக்கும் அப்போது டீ குடிக்கும் மூட் இல்லை. இருந்தாலும் ஒரு டீ வாங்கி கடைசியாக குடித்தேன். அது அவருக்கான டீ.
மனிதர்களின் முகபாவனைகளை, பேச்சுக்களை வைத்து மனிதர்களை எடை போடுவது உண்டு. இது எல்லா இடத்திலும் பலிக்காது. சிரித்துக் கொண்டே இருந்த சின்னத்திரை சித்ரா இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்ததல்லவா? இதுதான் நிஜம். சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றோ, உம்மென்று இருப்பவர்கள் டிக்கட் வாங்கப்போகிறார்கள் என்றோ சொல்லமுடியாது. இந்த கணக்கு சில இடங்களில் தப்பாகவும் போகும்.
இங்கே பேசும்போது எனக்கே தெரியாமல் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் ஒரு நபரின் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் என்னுடைய கணக்கு தப்பாக இருந்தது, இன்னொரு இடத்தில் இவர். அவர் வாங்கிக்கொடுத்தது 5 ரூபாய் மதிப்புள்ள டீ யாக இருந்தாலும் மறக்கமுடியாத அளவுக்கு என் நினைவில் தங்கிவிட்ட டீ அது.