2005 ல் நான் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். ASIA TIMES என்ற இணைய இதழில் சூடாக கருத்து மோதல் நடந்து கொண்டிருந்தது. ஆர்வமாக கவனித்தேன். அதில் ஒரு சீனன் இந்தியாவை மேலை நாடுகளோடு ஒப்பிட்டும், நம் நாட்டின் ஜாதி அமைப்பை பற்றியும் விமர்சிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கோவம் வந்தது. அதுவரை எதுவும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த அர்த்தமற்ற விமர்சனம் என்னை தூண்டியதால் பதில் எழுதினேன்.
என்னுடைய ஆங்கிலமோ சுயம்பு. ஆங்கில நாவல்கள் படித்தும், டிவி கேட்டல் மூலமாகவும் கற்றது. எழுத வரவில்லை. நானும் அந்த முயற்சில் கொஞ்சம் எம்பி எம்பி பார்த்து, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் இது கோபத்தை தூண்டி விட, வார்த்தைகளும் வேகமாக வந்து விழ, இலக்கணத்தை பற்றி கவலைப்படாமல் எழுதி அனுப்பினேன். அது அதிக திருத்தங்கள் இல்லாமல் பிரசுரமாகி, பரவாயில்லை பாஸாயிட்டோம் என திருப்தியையும் கொடுக்க, அது தொடர்கதையானது.
கடந்த பதிவில் இந்தியாவை மேலை நாடுகளுடன் ஓப்பிட்டு நண்பர் வவ்வால் பின்னோட்டம் இட்டிருந்தார். அது அந்த முதல் கடிதத்தை நினைவுபடுத்தியது. அந்த கடிதத்தில் நான் இப்படி முடித்தேன்.